உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தலாம் - ரோகித் சர்மா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. இப்போட்டியில் 444 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக அஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.
இதைதொடர்ந்து ஆடிய இந்திய கிரிக்கெட் அணி 234 ரன்னில் ஆல் அவுட் ஆகி 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் அணியாக ஆஸ்திரேலியா வரலாற்று சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,
ஆஸ்திரேலிய பேட்டிஸ்மென்கள் சிறப்பாக விளையாடினர். ஸ்டீவ் ஸ்மித் உடன் சேர்ந்து ஹெட் சிறப்பாக ஆடினார். மீண்டு வருவது மிகவும் கடினம் என்று எங்களுக்கு தெரியும். ஆனாலும் நாங்கள் சிறப்பாக ஆடினோம். நாங்கள் இறுதிவரை போராடினோம்.
2 இறுதிப்போட்டிகளில் விளையாடுவதே எங்களுக்கு மிகச்சிறந்த சாதனை தான். ஒட்டுமொத்த அணியாக சிறப்பான முயற்சி மேற்கொண்டோம். ஆனால், துரதிஷ்டவசமாக இறுதிப்போட்டியில் எங்களால் வெல்லமுடியவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட விரும்புகிறேன். 2 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தோம், ஆனால் நாங்கள் இங்கு விளையாடியது ஒரே ஒரு போட்டி.
அடுத்த உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதிப்போட்டி 3 போட்டிகள் கொண்ட தொடராக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.