ஷிகர் தவானின் சாதனையை அறிமுகப்போட்டியில் முறியடிக்க காத்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்...!


ஷிகர் தவானின் சாதனையை அறிமுகப்போட்டியில் முறியடிக்க காத்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்...!
x

Image Courtesy: @BCCI

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களம் இறங்கி சதம் அடித்தார்.

டொமினிகா,

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணிஅங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்தனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலாவது போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் போட்டியிலேயே அவரது முதிர்ச்சியான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு புஜாரா நீக்கப்பட்டதால் சுப்மன் கில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக அறிமுகமாகி அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்திருந்த வேளையில் ஜெய்ஸ்வால் 350 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார். தற்போதே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இவ்வேளையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் சீனியர் வீரரான ஷிகர் தவானின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்திய அணிக்காக துவக்க வீரராக களம் இறங்கி அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஷிகர் தவானே இதுவரை இருந்து வருகிறார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான தவான் 187 ரன்கள் குவித்திருந்தார். இந்நிலையில் அவரது இந்த சாதனையை முறியடிக்க ஜெயிஸ்வாலிற்கு இன்னும் 44 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

நிச்சயம் இவர் தவானின் அந்த சாதனையை முறியடிப்பதோடு மட்டுமின்றி அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடித்த முதல் இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை படைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.


Next Story