கார் மீது தனியார் பஸ் மோதியது 2 வாலிபர்கள் சாவு; 3 பேர் படுகாயம்


கார் மீது தனியார் பஸ் மோதியது 2 வாலிபர்கள் சாவு; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 July 2018 4:30 AM IST (Updated: 17 July 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

குந்தாப்புரா அருகே, கார் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்து உள்ளது.

மங்களூரு,

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா ஒசமடா பகுதியை சேர்ந்தவர் கிரண்ஷெட்டி(வயது 23). அதேப்பகுதியை சேர்ந்தவர் தீக்‌ஷித்ஷெட்டி(23). 2 பேரும் நண்பர்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கிரண்ஷெட்டி, தீக்‌ஷித்ஷெட்டி ஆகியோர் தங்களின் நண்பர்களான அருண், மனீஷ், ஜீவன் ஆகியோருடன் ஒரு காரில் சிவமொக்கா மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஜோக் நீர்வீழ்ச்சி உள்பட பல இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் பின்னர் காரில் குந்தாப்புரா நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

காரை கிரண்ஷெட்டி ஓட்டி வந்தார். கார் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒசமடா அருகே உள்ள வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே குந்தாப்புராவில் இருந்து சித்தாப்புரா நோக்கி சென்ற ஒரு தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், தனியார் பஸ்சும் பயங்கர வேகத்தில் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. இதில் கிரண்ஷெட்டியும், தீக்‌ஷித் ஷெட்டியும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அருண், மனீஷ், ஜீவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் குந்தாப்புரா போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிரண்ஷெட்டி, தீக்‌ஷித்ஷெட்டியின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக குந்தாப்புரா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது கார் விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் ஒசமடா பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story