நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் நாடு திரும்பினார்


நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் நாடு திரும்பினார்
x
தினத்தந்தி 21 Feb 2023 4:25 AM IST (Updated: 22 Feb 2023 3:18 AM IST)
t-max-icont-min-icon

நெருங்கிய உறவினருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் கம்மின்ஸ் நாடு திரும்பினார்.

3-வது டெஸ்ட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன், பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் தக்க வைத்தது. முதல் டெஸ்டை போல் 2-வது டெஸ்டிலும் இந்திய வீரர்களின் சுழற்பந்து வீச்சு தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாளிலேயே 'சரண்' அடைந்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்சின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலப்பிரச்சினை காரணமாக அவர் டெல்லி டெஸ்ட் போட்டி முடிந்ததும் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளார். இந்த தகவலை உறுதி செய்த ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு, 'தற்போது சிட்னியில் இருக்கும் கம்மின்சுடன் நாங்கள் தொடர்பு கொண்டு அணியில் சில வீரர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காயத்தால் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்' என்று தெரிவித்தார்.

இந்தூர் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியினருடன் இணைந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கம்மின்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டால், துணை கேப்டன் ஸ்டீவன் சுமித் கேப்டன் பணியை கவனிப்பார்.

இதற்கிடையே, காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் ஆடாத ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் உடல் தகுதியை எட்டாததால் எஞ்சிய தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவர் நாடு திரும்ப இருப்பதாக பயிற்சியாளர் மெக்டொனால்டு கூறியுள்ளார்.

டெல்லி டெஸ்டில் முதல் நாளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய ஷாட் பிட்ச் பந்து ஹெல்மெட்டில் தாக்கியதால் தலையில் பாதிப்பை உணர்ந்த ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அன்றைய ஆட்டம் முடிந்ததும் அந்த போட்டியில் இருந்து விலகினார். அத்துடன் பந்து தாக்கியதில் அவருக்கு இடது முழங்கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

வார்னர் உடல் தகுதி விஷயத்தில் முடிவு எடுப்பதில் அவசரம் காட்டமாட்டோம். மருத்துவ குழுவினர் அளிக்கும் அறிக்கையை பொறுத்து இறுதி முடிவு எடுப்போம் என்றும் மெக்டொனால்டு கூறினார். காயத்தில் இருந்து மீண்டு வரும் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் 3-வது டெஸ்டுக்குள் உடல் தகுதியை அடைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story