''தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் போதாது"
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் போதாது. எனவே கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் போதாது. எனவே கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
தீபாவளி பண்டிகை
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகை முதன்மையானதாகும். பொது மக்களுக்கு பல்வேறு கொடுமைகள் புரிந்த நரகாசுரனை அழித்த தினமே தீபாவளி என்றும், ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் புரிந்து மீண்டும் அயோத்திக்கு திரும்பிய தினம் தீபாவளி என்றும் இந்து புராணங்களில் கூறப்படுகின்றன.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன.
தீபாவளி என்றாலே பட்டாசுகள்தான் நினைவுக்கு வரும். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசுகள், இனிப்புகள் முக்கிய அங்கம் வகிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். வெகு சிலரே காற்று மாசு, அதீத ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்பார்கள். இரவு நேரங்களில் பல்வேறு வகையான மத்தாப்பு, ராக்கெட்டுகளால் வானத்தில் வர்ணஜாலம் நிகழ்வதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். வீதிகளில் எங்கு திரும்பினாலும் பட்டாசு மயமாகவும், பட்டாசு சத்தமாகவும் இருக்கும்.
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு
பட்டாசு இன்றி நிறைவு பெறாது தீபாவளி பண்டிகை என்று சொல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பட்டாசுகள் வெடிப்பதற்கு கடிவாளம் போடுவதுபோன்று காற்று மாசுவை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி 2018-ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி உள்ளது.
இதனை மீறி கூடுதல் நேரங்களில் பட்டாசு வெடிக்கும் நபர்கள் மீது காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக நேர கட்டுப்பாடு சரியானது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையன்று நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். அல்லது கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இது பற்றிய பொதுமக்களின் கருத்துகளை காண்போம்.
கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்
வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ்:-
சிறுவர்கள் தான் அதிகளவு பட்டாசுகளை வெடித்து பண்டிகையை கொண்டாடுவார்கள். இப்போது சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று கூறி அதற்கு நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள். நாள்தோறும் வாகனங்கள் மூலம் வெளியேறும் நச்சுப்புகை, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை உள்ளிட்டவற்றை விட பட்டாசுகள் வெடிப்பதால் வெளியேறும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடும், உடல்நல பாதிப்பும் மிகவும் குறைவுதான். குழந்தைகள் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாட தயாராவதற்குள் 7 மணியை கடந்து விடும். அதனால் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் பட்டாசு வெடிப்பது என்பது இயலாது.
எனவே இந்த ஒரு மணி நேரத்தை காலையில் வழங்குவதை தவிர்த்து, அன்றைய தினம் முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் அல்லது மாலையில் 6 மணி முதல் இரவு 8 மணி வரை என்று நிர்ணயம் செய்யலாம்.
வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் சந்தோஷ்:-
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் போதாது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூடுதல் நேரம் வழங்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு என்பது அனைவரின் மகிழ்ச்சிக்கும் கட்டுப்பாடு விதித்தது போன்று உள்ளது. அதேபோன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசுகள் வெடிக்கும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வது மிகவும் வேதனைக்கு உரியதாகும். பட்டாசு தயாரிக்கும் இடத்தில் அதிக ஒலி எழுப்பும், பட்டாசுகளையும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிப்பதை தவிர்க்க வேண்டும்.
திருவண்ணாமலையை சேர்ந்த பாக்கியராஜ்:
தீபாவளி பண்டிகை என்பது வருடத்தில் ஒரு நாள் மட்டுமே கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். இந்த நாளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். ஆனால் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையும் என 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது வேதனை அளிக்கிறது. இது மக்கள் மகிழ்ச்சியை தடை செய்யும் செயலாகும். எனவே பட்டாசு வெடிக்க கூடுதல் நேரங்கள் அனுமதிக்க வேண்டும்.
திருவண்ணாமலையை சேர்ந்த பச்சையப்பன்:
தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடுவதற்காக அனைத்து தரப்பு மக்களும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பட்டாசு வாங்கி வெடித்து மகிழ்வார்கள். ஆனால் தற்போது பட்டாசு வெடிக்க காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் மட்டும் அனுமதி அளித்துள்ளது வேதனைக்குரியதாக உள்ளது. மாலை நேரத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு வகையான வாண வேடிக்கைகள் பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். எனவே மாலையில் 1 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி கொடுத்துள்ளது ஏற்புடையதல்ல. தீபாவளி அன்று பொதுமக்கள் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்றார்.
அரக்கோணம் பகுதி வளர்புரம் லோகேஸ்வரன்:
அரசியல்வாதிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் வரும் போது வெடிக்கும் வெடிகளின் அளவை கட்டுப்படுத்த மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு தைரியம் இல்லை. இந்த பண்டிகையின் மகிழ்ச்சியை தடுப்பதற்காகவே இந்த அறிவிப்புகளை செய்கின்றனர். வருடம் முழுவதும் வாகனங்களில், தொழிற்சாலை கழிவுகளில், தெருக்களில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் மாசு ஏற்படுவதை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவனிக்க மாட்டார்கள். ஆண்டாண்டு காலமாக தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த ஒரு நாளில் மட்டும் மாசு ஏற்படுகிறது என்பது நம்பும் படியாக இல்லை.
வரவேற்கத்தக்கது
கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் வாணாபாடியை சேர்ந்த நேதாஜி நடேசன்:
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. பட்டாசு வெடிப்பதன் மூலம், காற்று மாசடைந்து, சுற்றுச் சூழல் பாதிக்கிறது. இதனால் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்பது காற்று மாசடைவதை குறைக்கும். மேலும் விபத்துகளையும் தடுக்கலாம்.
மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இன்றைக்கு சாலையில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. சாலையில் நாள் முழுக்க பட்டாசு வெடித்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள். இந்த பாதிப்பும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரமாக ஆக்கப்பட்டதன் மூலம் குறையும். எனவே பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் ஒதுக்கியது வரவேற்கத்தக்கது.