மணிகா பத்ரா தொடர்ந்த சூதாட்ட வழக்கு: இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் இடைநீக்கம்


மணிகா பத்ரா தொடர்ந்த சூதாட்ட வழக்கு: இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் இடைநீக்கம்
x
தினத்தந்தி 12 Feb 2022 4:08 AM IST (Updated: 12 Feb 2022 4:08 AM IST)
t-max-icont-min-icon

மணிகா பத்ரா சூதாட்ட வழக்கு தொடர்ந்ததையடுத்து இந்திய டென்னிஸ் சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோகாவில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியின் போது இந்திய டேபிள் டென்னிஸ் அணியின் பயிற்சியாளர் சவும்யாதீப் ராய் தன்னுடைய அகாடமியில் பயிற்சி பெற்ற வீராங்கனையான சுதிர்தா முகர்ஜி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு வசதியாக அவருக்கு எதிரான ஆட்டத்தில் என்னை விட்டுக்கொடுத்து (மேட்ச் பிக்சிங் சூதாட்டம்) விளையாடும்படி கேட்டுக்கொண்டார் என்று இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீராங்கனையான மணிகா பத்ரா பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார். 

அத்துடன் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கின் போது தேசிய பயிற்சியாளரிடம் ஆலோசனை கேட்கவும் மறுத்தார். இந்த விவகாரம் குறித்து மணிகா பத்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் அவரை சேர்க்கவில்லை. பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாததால் அவருக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை என்று விளக்கம் அளித்தது.

இதற்கிடையே, தன் மீதான இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மணிகா பத்ரா, தன்னை தேசிய பயிற்சியாளர் சக வீராங்கனைக்காக போட்டியை தாரைவார்க்க சொன்ன விஷயம் குறித்து முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ரேகா பாலி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதி ரேகா பாலி, இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் நிர்வாக கமிட்டியை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் சம்மேளனத்தின் நிர்வாகத்தை கவனிக்க நிர்வாகியை நியமிக்கவும் உத்தரவிட்டார். அவர் தனது உத்தரவில், ‘வீராங்கனை விவகாரத்தில் இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் நம்பகத்தன்மை ஆட்டம் கண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. வீரர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு பதிலாக நிர்வாகிகளின் நலனை பாதுகாப்பதில் தான் சம்மேளனம் அக்கறை காட்டியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story