மறைந்த ஷேன் வார்னேவின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை!
மறைந்த ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவின் உடலுக்கு தாய்லாந்தில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
தாய்லாந்து,
மறைந்த ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே உடற்கூறு ஆய்வு இன்று தாய்லாந்தில் செய்யப்படுகிறது. முன்னதாக ஷேன் வார்னின் உடல் அவருடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு முன்னதாக பிரேத பரிசோதனைக்கு தயார் செய்யப்பட்டது.
52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, பிணமாக கிடந்தார்.
மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய அவரை ‘தாய் சர்வதேச மருத்துவமனைக்கு’ மாலை 6 மணியளவில் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அசைவின்றி கிடந்த அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க டாக்டர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிகிறது.
வார்னின் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனைக்காக வார்னின் உடல் தாய்லாந்தில் உள்ள சூரத் தானிக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வார்னேவின் உறவினர்கள், பிரேதப் பரிசோதனை முடிந்ததும், அவரது உடலை ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஷேன் வார்னேவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவில் அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று கூறினார்.
இதனையடுத்து அவருடைய உடலை தாய்லாந்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன் ஒரு நடவடிக்கையாக, இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
மேலும், சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல பிரபலங்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story