உலக கோப்பை கால்பந்து: ஒரே பிரிவில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள்
5 முறை உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான பிரேசில் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
தோகா,
32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கு இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 அணிகள் எவை என்பது ஜூன் மாதம் தெரிய வரும்.
இந்த நிலையில் இந்த போட்டியில் லீக் சுற்றில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா நிகழ்ச்சி) நேற்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் கத்தார் தலைநகர் தோகாவில் நேற்றிரவு நடந்தது.
இதன்படி அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. 5 முறை உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான பிரேசில் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் அந்த அணியில் உள்ள மற்ற அணிகளாகும். ‘ஏ’ பிரிவில் கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து, ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, தகுதி சுற்று அணி, ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா, சவுதிஅரேபியா, மெக்சிகோ, போலந்து, ‘டி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, தகுதி சுற்று அணி, ‘இ’ பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ஜப்பான், தகுதி சுற்று அணி, ‘எப்’ பிரிவில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா, ‘எச்’ பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
Related Tags :
Next Story