தொடர்ந்து 13 செவ்வாய்க்கிழமை வழிபடவேண்டும்.. திருமண தடை நீக்கும் மயிலேறி முருகன்
மயிலேறி முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியில் அபிஷேக அலங்கார ஆராதனை சிறப்பாக நடைபெறும்.
அம்பாசமுத்திரம் அருகே ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது மயிலேறி முருகன் கோவில். குன்றின் மீதுள்ள முருகன் ஆலயத்தை சென்றடைய 500 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். குன்றின் அடிவாரத்தில் சிறிய பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. மலை ஏறிச் செல்லும் வழியில் இடும்பன் சன்னிதியும், அகத்தியர் சன்னிதியும் உள்ளன குன்றின் உச்சியில் சிறிய அளவிலான முருகன் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி-தெய்வானையுடன் கல்யாண கோலத்தில், மயில் வாகனத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். அருகிலேயே உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றனர். கருவறையின் முன்பாகவும் மயில் வாகனம் இருக்கிறது.
தல வரலாறு
தூத்துக்குடியில் துறைமுகம் அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு தேவையான பாறைகளை அருகில் உள்ள மலைக் குன்றில் இருந்து வெட்டி எடுத்தனர். இந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அயர்ச்சியையும் சோர்வையும் போக்குவதற்காக தங்களின் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை வேண்டிக்கொண்டனர். அதற்காக அங்கிருந்த பாறை ஒன்றில், வேல், மயில், ஓம் என்ற எழுத்துக்களை புடைப்புச் சிற்பமாக செதுக்கி வைத்து வழிபடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் வந்த வேலை முடிந்ததும், தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
காலப்போக்கில் மலையடிவாரத்தில் மக்கள் வீடு கட்டி குடியேறத் தொடங்கினர். மக்கள் நடமாட்டம் அதிகரித்த நிலையில், அனுதினமும் காலையிலும் மாலையிலும் ஒரு மயில் எங்கிருந்தோ பறந்து வந்து, தொழிலாளர்கள் புடைப்புச் சிற்பமாய் முருகனை வணங்கிய பாறையில் நின்று தோகை விரித்து நடனமாடிச் சென்றது. தினம் தினம் இது நடக்கவே, என்ன காரணமாக இருக்கும் என யோசித்த மக்கள், ஒருநாள் மலை மீது ஏறிச் சென்று பார்த்தனர்.
அங்கு பாறையில் புடைப்புச் சிற்பத்தை கண்டு மெய்சிலிர்த்த அப்பகுதி மக்கள், இவ்விடத்தில் முருகன் கோவில் அமைத்து வழிபட நினைத்தனர். ஆனால் இங்கு கோவில் அமைப்பதில் இறைவனுக்கு விருப்பமா என்பதை அறிய, அந்த ஊரில் இருந்து ஒரு சிறுவனிடம் வேல் ஒன்றைக் கொடுத்து, "உனக்கு விருப்பமாக இடத்தில் இந்த வேலை ஊன்று" என்று கூறினர். உடனே அந்த சிறுவன், தன்னுடைய குடியிருப்பு பகுதியில் இருந்து மலைக் குன்றை நோக்கி ஓடினான். குன்றின் மீது ஏறிச் சென்று அங்கு புடைப்புச் சிற்பங்கள் இருந்த இடத்தில் வேலை ஊன்றினான். எனவே மக்கள் அனைவரும் ஒரு மனதாக அங்கே கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பது இந்த ஆலயத்தின் வரலாறாக சொல்லப்படுகிறது.
நம்பிக்கை
இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானை வழிபாடு செய்தால், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து 13 செவ்வாய்க்கிழமைகளில், இத்தல முருகனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, எலுமிச்சைப் பழம் சமர்ப்பித்து, விளக்கேற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள். வேலை கிடைக்கவும், கடன் தொல்லை அகலவும் இந்த முருகனை வழிபாடு செய்கிறார்கள்.
சிவலிங்கம்
இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கியவாறு தொழிலாளர்கள் அமைத்த பாறை சிற்பம் அமைந்துள்ளது. அதன் பின்புறம் உள்ள பாறை, இயற்கையாக நந்தி அமர்ந்திருப்பது போல் காட்சி தருகிறது. அதன் அருகில் காசியில் இருந்து கொண்டுவந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். மலையில் இருந்து கீழிறங்கி வர தனியாக படிகள் உள்ளன.
வழிபாடு
இங்கு பவுர்ணமி இரவில் அகத்தியருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் கூட்டு வழிபாடும் உண்டு. மயிலேறி முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியில் அபிஷேக அலங்கார ஆராதனை சிறப்பாக நடைபெறும். வைகாசி விசாகம் அன்று சிறப்பு வழிபாடும் நடக்கிறது.
அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் டீச்சர்ஸ் காலனி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இறங்கி நடந்து செல்லும் தொலைவில் என்.ஜி.ஓ. காலனியில் கோவில் உள்ளது.