‘96’ படம் திருட்டு கதையா? பாரதிராஜா புகாருக்கு டைரக்டர் மறுப்பு

விஜய் சேதுபதி–திரிஷா நடித்துள்ள ‘96’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்தின் கதையை தனது உதவி இயக்குனர் சுரேசிடம் இருந்து திருடி படமாக்கி இருப்பதாக பாரதிராஜா குற்றம்சாட்டினார்.

Update: 2018-11-01 23:00 GMT
பாரதிராஜா இதுகுறித்து  கூறியதாவது:–

‘‘என்னிடம் 10 வருடங்களுக்கு மேல் உதவி இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் என்பவர் 96 படத்தின் கதையை ஏற்கனவே 92 என்ற தலைப்பில் என்னிடம் சொல்லி இருக்கிறார். அந்த படத்தை நானே டைரக்டு செய்ய முடிவு செய்தேன். ஆனால் அந்த முயற்சி தள்ளிப்போனது. இந்த கதை மேலும் சிலருக்கு தெரியும்.

அவர்கள் 96 படத்தை பார்த்துவிட்டு சுரேஷ் கதையை திருடி படமாக்கி விட்டனர் என்று எனக்கு போன் செய்தார்கள். அதன் பிறகு நானும் படத்தை பார்த்து அதிர்ந்து போனேன். சுரேஷ் எனக்கு எப்படி கதை சொன்னாரோ அதே கதை, காட்சிகள் வாரியாக 90 சதவீதம் அப்படியே படத்தில் இருந்தது.

கருவை எடுத்து இருந்தால் பரவாயில்லை. குழந்தையையே தூக்கி போனதுபோல் முழு கதையையும் திருடி விட்டனர். கதை திருட்டு சமீப காலத்தில் அதிகம் நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் இதுகுறித்து புகார் செய்து இருக்கிறேன்.

இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

இதனை 96 படத்தின் டைரக்டர் பிரேம்குமார் மறுத்தார். ‘‘பாரதிராஜா குற்றச்சாட்டில் உண்மை இல்லை. கதை தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது. கதை முழுக்க என்னுடையதுதான். இதை நிரூபிக்க தயார். திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்து இருக்கிறேன். சுரேஷ் கதை என்பதற்கு அவரிடம் ஆதாரம் இல்லை’’ என்றார்.

மேலும் செய்திகள்