பசுமை இந்தியா திட்டத்தில் 1,650 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்த பிரபாஸ்

நடிகர் பிரபாஸ், பசுமை இந்தியா திட்டத்தில் 1,650 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்துள்ளார்.

Update: 2020-09-09 00:36 GMT

தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் பிரபாஸ். அவரது சாஹோ படமும் இரு மொழிகளிலும் வெளியானது. ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடிக்க உள்ளார்.

கொரோனா ஊரடங்கில் பிரபாஸ் ரூ.4 கோடி நிதி அளித்தார். தற்போது ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் உள்ள 1,650 ஏக்கர் வனப்பகுதியை பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் தத்தெடுத்து மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.2 கோடி வழங்கி உள்ளார்.

பிரபாஸ் தத்தெடுத்துள்ள இந்த வனப்பகுதி ஐதராபாத்துக்கு 20 கிலோ மீட்டர் தூரத்தில் அவுட்டர் ரிங் சாலையில் அமைந்துள்ளது. இதற்கான அடிக்கல்லை தெலுங்கானா மாநில அமைச்சர் இந்திராகரன் ரெட்டி அல்லோலாவுடன் பிரபாஸ் நட்டார். பின்னர் வனப்பகுதியில் மரக்கன்றுகளையும் நட்டார்.

வனப்பகுதியின் சிறிய பகுதி வனப்பூங்காவாக மாற்றப்படும் என்றும் மற்ற பகுதியில் அரியவகை மூலிகைகள் தாவரங்களுடன் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் என்றும் வன அலுவலர்கள் தெரிவித்தனர். பூங்காவில் வாசல் அமைப்பது, வெளியில் இருந்தே பூங்காவில் இருப்பவற்றை பார்ப்பது, நடைபாதை அமைத்தல், மூலிகை பண்ணை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் செய்திகள்