நடிகை-டைரக்டர் ஜெயதேவி மரணம்

தமிழ் சினிமாவின் பெண் இயக்குநராக வலம்வந்த பிரபல நடிகை ஜெயதேவி மரணம் அடைந்தார்.

Update: 2023-10-05 01:49 GMT

தமிழில் ஜெமினி கணேசன் நடிப்பில் 1976-ல் வெளியான 'இதயமலர்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜெயதேவி. தொடர்ந்து ஜெய்சங்கருடன் 'வாழ நினைத்தால் வாழலாம்', ரஜினிகாந்துடன் 'காயத்ரி', 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு', 'மற்றவை நேரில்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து இருந்தார்.

'நலம் நலமறிய ஆவல்', 'விலங்கு', 'விலாங்கு மீன்' ஆகிய படங்களை டைரக்டு செய்துள்ளார். 'வா இந்த பக்கம்', 'நன்றி மீண்டும் வருக', 'ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது', 'பவர் ஆப் வுமன்' ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறார்.

'பவர் ஆப் வுமன்' படத்தில் குஷ்பு நடித்து இருந்தார். இந்த படம் தமிழக அரசு விருதை பெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

சென்னை போரூரில் வசித்து வந்த ஜெயதேவிக்கு இதயநோய் பாதிப்புகள் ஏற்பட்டன. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு ஜெயதேவி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.

Tags:    

மேலும் செய்திகள்