நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு: லைகா நிறுவனம் 19ம் தேதிக்குள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

லைகா நிறுவனத்தின் ரூ.5.24 கோடி சொத்துகளை முடக்கக்கோரி நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Update: 2024-01-02 12:32 GMT

சென்னை,

நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை மீறி வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக, விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. பணம் இருந்தும் வேண்டும் என்றே தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை விஷால் தராமல் இருப்பதாக லைகா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது விஷால் தரப்பு வழக்கறிஞர், லைகா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் தருமாறு கேட்டுக்கொண்டார். மேலும் பணத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும், லைகா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே லைகா நிறுவனத்தின் ரூ.5.24 கோடி சொத்துகளை முடக்கக்கோரி நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், 'விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரித்த 'சண்டக்கோழி-2' திரையரங்க வெளியீட்டு உரிமைக்காக கடந்த 2018ம் ஆண்டு ரூ.23.21 கோடிக்கு லைகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் உரிமையை கைப்பற்றிய லைகா நிறுவனம் 12% ஜி.எஸ்.டி தொகையை செலுத்த தவறியது.

அதனால் அபாரத்துடன் சேர்த்து ரூ.4.88 கோடியை விஷால் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் சார்பில் நான் செலுத்தியுள்ளேன். என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய லைகா நிறுவனம் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படத்தை ரூ.500 கோடி செலவில் தயாரித்து வருகிறது. அந்த படம் வெற்றி பெறாவிட்டால் கடுமையான நிதி நெருக்கடியை லைகா நிறுவனம் சந்திக்க நேரிடும். அதனால் எனக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போய்விடும்.

லைகா நிறுவனம் வெளிநாட்டை சேர்ந்த நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டுக்கு தப்பிசெல்ல வாய்ப்புள்ளது. நான் செலுத்திய அபாரதத் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.5.24 கோடியை வழங்க வேண்டும். இந்த வழக்கு முடியும்வரை லைகா நிறுவனத்தின் ரூ.5.24 கோடி சொத்துகளை முடக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அப்துல் குர்தூஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 19ம் தேதிக்குள் லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்