அரசியலில் ஈடுபட போகிறேனா? நடிகர் அர்ஜூன் விளக்கம்

பிரதமரை என்னுடைய கோவிலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன் என்று நடிகர் அர்ஜூன் கூறினார்.

Update: 2024-01-20 23:45 GMT

சென்னையில் நடந்த 18 வயதுக்குட்பட்டோருக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழா முடிந்ததும், கவர்னர் மாளிகையில் ஓய்வெடுத்த பிரதமர், அங்கு சில முக்கிய பிரமுகர்களையும் சந்தித்தார். அந்தவகையில் நடிகர் அர்ஜூனும், பிரதமரை சந்தித்து பேசி சென்றார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து அர்ஜூன் பா.ஜனதாவில் இணைந்துவிட்டதாகவும், அரசியலில் தீவிரமாக ஈடுபட போவதாகவும் பேசப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அர்ஜூன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், பிரதமரை என்னுடைய கோவிலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். விரைவில் வருவதாக கூறினார். இது ஒரு சாதாரண சந்திப்புதான். எங்கள் குடும்பத்தினருக்கு பிடித்த மனிதர். அவர் சென்னைக்கு வந்ததால் சந்திக்க அனுமதி கேட்டோம். அனுமதி கிடைத்ததால் வந்து சந்தித்தேன்.

மற்றபடி நான் பா.ஜனதாவில் இணைந்து விட்டதாக சொல்லப்படும் தகவல்களில் உண்மை இல்லை. எனக்கு அரசியல் சுத்தமாக தெரியாது. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, என்று அர்ஜூன் கூறியுள்ளார்.

இதன்மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்