தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு இடமளிக்க கூடாது கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெகலான் பாகவி பேட்டி

தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு இடமளிக்க கூடாது என்று கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கூறினார். எஸ்.டி.பி.ஐ. செயற்குழு கூட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் தெகலான்

Update: 2016-12-13 22:00 GMT

கோவை,

தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு இடமளிக்க கூடாது என்று கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கூறினார்.

எஸ்.டி.பி.ஐ. செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் தெகலான் பாகவி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ரபீக் அகமது, அம்ஜத் பாஷா, பொது செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, செயலாளர்கள் அமீர் அம்சா, ரத்தினம், எஸ்.டி.டி.யூ. மாநில தலைவர் முகமது பாரூக், நஜிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் அப்துல் சத்தார் வரவேற்றார். கூட்டத்தில், முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாநில தலைவர் தெகலான் பாகவி நிருபர்களிடம் கூறியதாவது:–

பா.ஜனதா அரசு தோல்வி

எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் நாடே ஸ்தம்பித்து உள்ளது. இந்த பிரச்சினை 50 நாட்களில் சரியாகிவிடும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். ஆனால் இருக்கிற நிலைமையை பார்த்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, இன்னும் பல மாதங்கள் ஆனாலும் தீராது என்றே தெரிகிறது.

இதன் மூலம் பா.ஜனதா அரசு இந்திய மக்கள் மீது மிகப்பெரிய போரை தொடுத்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையே முடங்கி விட்டது. தொழில் பாதிப்பால் வணிகர்கள் பெரும் துயருக்கு ஆளாகி உள்ளனர். இந்த நடவடிக்கையால் பா.ஜனதா அரசு தோல்வியை தழுவி விட்டது. ஆகவே இந்த திட்டத்தில் இருந்து பின்வாங்க வேண்டும். இதனை கண்டித்து எங்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம்.

இடமளிக்க கூடாது

தமிழகத்தில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. கட்சி முடிவுகளிலும், ஆட்சியின் நிலைபாட்டிலும் பா.ஜனதா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயன்று வருகின்றது. ஆகவே அ.தி.மு.க. நிர்வாகிகள் விழிப்போடு இருக்க வேண்டும். தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு இடம் அளிக்ககூடாது. மதசார்பற்ற சக்திகள் அனைவரும் தமிழகத்தின் அமைதியை பாதுகாக்க தயாராக வேண்டும்.

சென்னை உள்பட தமிழகத்தில் ஏற்பட்ட வர்தா புயலின் தாக்கத்துக்கு தமிழக அரசு செய்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் வரவேற்கதக்கது. மேலும் இனிவருகின்ற காலங்களில் இதுபோன்ற திடீர் நிகழ்வுகளில் இருந்து மக்களை காக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றிற தூர்வார வேண்டும்.

கைவிட வேண்டும்

கோவையில் நடைபெற்ற சசிகுமார் படுகொலை தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். அதே நேரத்தில் முஸ்லிம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வதை போலீசார் கைவிட வேண்டும். மேலும் அந்த கொலையை தொடர்ந்து கோவையில் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்