உத்தமபாளையம் அருகே வரட்டாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

உத்தமபாளையம் அருகே, வரட்டாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வரட்டாறு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் சண்முகாநதி அணை உள்ளது. இந்த அணை கட்டுவதற்கு முன்பு ஹைவேவிஸ் மலைப்பகுதியில்

Update: 2016-12-14 22:15 GMT
உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகே, வரட்டாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரட்டாறு

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் சண்முகாநதி அணை உள்ளது. இந்த அணை கட்டுவதற்கு முன்பு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மழை பெய்யும் போது வரட்டாறு வழியாக தண்ணீர் முல்லைப்பெரியாற்றில் கலக்கும். சண்முகாநதி அணை கட்டிய பிறகு அணை நிரம்பினால் மட்டுமே தண்ணீர் வரட்டாறு வழியாக செல்லும்.

வரட்டாற்றில் தண்ணீர் வரும்போது, இந்த பகுதியில் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த நிலையில் வரட்டாற்றை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து தென்னை, வாழை, சவுக்கு உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் வரட்டாறு பரப்பளவு நாளுக்கு நாள் குறுகி வருகிறது.

ஏற்கனவே பருவமழை பொய்த்து போன நிலையில். வரட்டாற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே வரட்டாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘இந்த பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கிறது. சண்முகாநதி அணையின் மூலம் இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. மழை பெய்யும் சமயங்களில் இந்த அணை வருடத்திற்கு 2 முறை நிரம்பும். அணை நிரம்பும் போது வரட்டாற்றில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யவில்லை. இதன்காரணமாக சண்முகாநதி அணை நீர்வரத்து இன்றி வறண்டு விட்டது.

இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது வரட்டாறு பகுதியில் தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றவேண்டும்’ என்றனர். 

மேலும் செய்திகள்