வழக்கு ஆவணங்களை கணினியில் சேமிக்கும் வசதி: தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு சென்று அமல்படுத்தவேண்டும் மதுரை ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவு

வழக்கு ஆவணங்களை கணினியில் சேமிக்கும் வசதியை மதுரை ஐகோர்ட்டில் அமல்படுத்துவது குறித்து தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பதிவுத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் மனு நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த திருப்பதி வெங்கடேஸ்வரன் என்பவர் மீது பாவூர்சத்திரம் போலீ

Update: 2016-12-14 22:00 GMT
மதுரை,

வழக்கு ஆவணங்களை கணினியில் சேமிக்கும் வசதியை மதுரை ஐகோர்ட்டில் அமல்படுத்துவது குறித்து தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பதிவுத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டில் மனு

நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த திருப்பதி வெங்கடேஸ்வரன் என்பவர் மீது பாவூர்சத்திரம் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கில், கோர்ட்டு இறுதி உத்தரவு பிறப்பித்தது. அதில் திருத்தம் செய்யக்கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘நான் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420-ஐ குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், வழக்கின் இறுதி உத்தரவில் அந்த சட்டப்பிரிவு விடுபட்டுள்ளது. எனவே கோர்ட்டின் இறுதி உத்தரவை திருத்தம் செய்ய வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

ஏற்க முடியாது

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420 குறிப்பிடப்படவில்லை. அந்த மனுவின் அடிப்படையில் இறுதி உத்தரவிலும் அந்த பிரிவை குறிப்பிடவில்லை. மனுதாரர் தான் செய்த தவறை மறைத்து கோர்ட்டின் மீது குறை கூறுவதை ஏற்க முடியாது. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

பொதுவாக முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் மனுக்களில், முதல் தகவல் அறிக்கையில் உள்ள அனைத்து சட்டப்பிரிவுகளையும் மனுதாரர்கள் குறிப்பிடுவது இல்லை. சில நேரங்களில் விசாரணைகளின்போது முதல் தகவல் அறிக்கையை பார்வையிட்டு அதில் உள்ள சட்டப்பிரிவுகளை கோர்ட்டே உத்தரவில் சேர்த்துக் கொள்கிறது. இந்த நடைமுறையை அனைத்து விசாரணைகளின்போது கடைபிடிக்க முடியாது.

பதிவுத்துறைக்கு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை ஸ்கேன் செய்து கணினியில் சேமிக்கும் வசதி உள்ளது. இதனால் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் ஆவணங்களை ஒப்பிட்டு பார்க்கவும், அதில் தவறுகள் இருந்தால் திருத்தவும் முடிகிறது. இதுபோன்ற வசதியை மதுரை ஐகோர்ட்டிலும் அமல்படுத்த வேண்டும்.

இதனால் எதிர்காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்க்கும் நிலை தவிர்க்கப்படும். மேலும், மனுதாரர் தாக்கல் செய்யும் ஆவணங்களை கணினியில் சேமித்து வைத்திருக்கும் ஆவணங்களுடன் ஒப்பிட்டு யார் மீது தவறு என்ற முடிவை எட்டலாம். எனவே வழக்கு ஆவணங்களை கணினியில் சேமிக்கும் வசதியை மதுரை ஐகோர்ட்டில் அமல்படுத்துவது குறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் கவனத்துக்கு, ஐகோர்ட்டு பதிவுத்துறை கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்