வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பரங்கிப்பேட்டையில் பொது மக்கள் சாலை மறியல்

வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவிலில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பழைய ரூபாய் நோட்டுகள் பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் அதற்கு பதில் புதிதாக 2,000 மற்றும

Update: 2016-12-15 22:30 GMT

பரங்கிப்பேட்டை,

வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவிலில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழைய ரூபாய் நோட்டுகள்

பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் அதற்கு பதில் புதிதாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் எனவும் அறிவித்தது. தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் பொது மக்கள் டெபாசிட் செய்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளுமாறும் வலியுறுத்தியது.

அதன்படி பொது மக்கள் தங்களின் கையில் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் டெபாசிட் செய்தனர். ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை போதுமான அளவுக்கு ரிசர்வ் வங்கி வெளியிடாத காரணத்தால் பொது மக்களுக்கு தேவையான பணத்தை வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் இருந்து எடுக்க முடியவில்லை. இதனால் அவர்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.

பணப்பட்டுவாடா

இதன்காரணமாக கடலூர் மாவட்டத்தில் வங்கிகள் முன்பு பொது மக்கள் மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பரங்கிப்பேட்டையில் உள்ள வங்கிகளில் டோக்கன் அடிப்படையில் பொது மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இந்த டோக்கன் வாங்கி பணம் பெறுவதற்காக பொதுமக்கள் காலை 6 மணி முதல் வங்கி வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். ஆனால் வங்கியில் போதுமான அளவு பணம் இருப்பு இல்லாததால் சிலருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.

இதனால் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த பொது மக்கள் டோக்கன் கிடைக்காமலும், பணம் எடுக்க முடியாமலும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் பரங்கிப்பேட்டை கீரைக்காரத்தெருவில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு பொது மக்கள் பணம் எடுப்பதற்காக வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் வங்கி அதிகாரிகள் பணம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் திடீரென வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் ஆதரவு தெரிவித்து, மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார், வங்கியில் போதுமான தொகை இல்லாததால் அனைவருக்கும் பணம் வழங்கமுடியவில்லை. இதனால் வங்கிக்கு கூடுதலாக பணம் வந்தபின் தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் போதுமான தொகை வழங்கப்படும் என்று கூறினார். இதனை ஏற்ற பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்