‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: சுண்ணாம்பாறு தடுப்பணை பழுது சீரமைக்கப்பட்டது பொதுப்பணித்துறையினர் உடனடி நடவடிக்கை

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: சுண்ணாம்பாறு தடுப்பணை பழுது சீரமைக்கப்பட்டது பொதுப்பணித்துறையினர் உடனடி நடவடிக்கை

Update: 2016-12-15 22:45 GMT
அரியாங்குப்பம்,

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு தடுப்பணையின் கதவணையில் இருந்த பழுதை பொதுப்பணித்துறையினர் உடனடியாக சீரமைத்தனர்.

கதவணை பழுது

புதுவை மாநிலம் அரியாங்குப்பம் அருகே நோணாங்குப்பத்தில் புதுவை- கடலூர் சாலையின் குறுக்கே சுண்ணாம்பாறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே சுமார் அரை கிலோ மீட்டர் நீளத்தில் பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்ட தடுப்பணையுடன் கூடிய பழமையான பாலம் உள்ளது. தற்போது இந்த பாலம் பயன்பாட்டில் இல்லாத நிலையில், பக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் வழியாக போக்குவரத்து நடைபெறுகிறது.

பருவ மழை காலத்தில் சுண்ணாம்பாற்றில் ஏற்படும் வெள்ளத்தை தடுத்து, தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் பழைய பாலத்தின் கீழ் உள்ள தடுப்பணை பயன் அளித்து வருகிறது.

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி

இந்த தடுப்பணையில் இருந்து அவசர காலத்தில் தண்ணீரை வெளியேற்றும் வகையில் 3 இடங்களில் இரும்பினால் ஆன கதவணைகள் உள்ளன. முறையான பராமரிப்பு இன்றி அந்த கதவணைகள் துருப்பிடித்தும், ஓட்டை விழுந்தும் இருந்தது. அதன்வழியாக தண்ணீர் வெளியேறி கடலுக்குச் சென்று வீணாக கலந்து வந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இதுபற்றி தினத்தந்தியில் கடந்த 13-ந் தேதி படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கதவணையில் உள்ள பழுதை சரிசெய்ய பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். துருப்பிடித்த கதவணை பகுதிகளில் நேற்று கான்கிரீட் கலவை கொட்டி, பழுதை ஊழியர்கள் சரிசெய்தனர்.

தடுப்பணை பழுதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், செய்தி மூலம் தடுப்பணை பழுதை சுட்டிக்காட்டிய ‘தினத்தந்தி’க்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்