ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைத்த பேனர் கிழிப்பு: எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

கோவில்பட்டி அருகே ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2016-12-16 20:30 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பசும்பொன் தேசிய கழகம் சார்பில், டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவில் மர்மநபர்கள் டிஜிட்டல் பேனரை கிழித்து சேதப்படுத்தினர்.

நேற்று காலையில் இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். டிஜிட்டல் பேனரை கிழித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவில்பட்டி– கடலையூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் ஜூடி (நாலாட்டின்புத்தூர்), பவுல்ராஜ் (கிழக்கு) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிஜிட்டல் பேனரை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததின்பேரில், அனைவரும் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிஜிட்டல் பேனரை சேதப்படுத்தியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்