கரூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு போலி உரிமம் மூலம் மணல் கடத்திய லாரி பறிமுதல்

கரூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு போலி உரிமம் மூலம் மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மணல் கடத்தல் கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் சித்தோடு வழியாக கர்நாடக மாநிலத்துக்கு மணல் கடத்தப்படுவதாக, தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளனத்துக்கு தகவல்

Update: 2016-12-16 21:30 GMT

ஈரோடு

கரூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு போலி உரிமம் மூலம் மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மணல் கடத்தல்

கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் சித்தோடு வழியாக கர்நாடக மாநிலத்துக்கு மணல் கடத்தப்படுவதாக, தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளனத்துக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து மணல் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் சாமிநாதன், ஈரோடு மாவட்ட தலைவர் சின்னப்பன், துணைத்தலைவர் ஜெகதீஸ், செயலாளர் சரவணன் ஆகியோர் நேற்று காலை சித்தோடு பகுதியில் நின்றுகொண்டு அந்த வழியாக கர்நாடகாவுக்கு லாரியில் மணல் கடத்தப்படுகிறதா? என்று பார்வையிட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிவந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி பார்வையிட்ட போது அதில் அளவுக்கு அதிகமாக மணல் இருந்தது தெரியவந்தது.

லாரி பறிமுதல்

பின்னர் அவர்கள் இதுபற்றி ஈரோடு வடக்கு வருவாய் ஆய்வாளர் நல்லசாமி மற்றும் குமிளம்பரப்பு கிராம நிர்வாக அதிகாரி சர்மிளா பானு ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ‘கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான லாரி என்பதும், அந்த லாரியில் 3 யூனிட் மணல் ஏற்றுவதற்கு பதிலாக 7 யூனிட் மணல் ஏற்றி வந்ததும்’ தெரியவந்தது.

மேலும் போலி உரிமம் மூலம் கர்நாடகாவுக்கு மணல் கடத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்