வனப்பகுதி வழியாக கோவிலுக்கு வாகனத்துடன் சென்ற அய்யப்ப பக்தர்களை வனத்துறையினர் தடுத்ததால் பரபரப்பு

வனப்பகுதி வழியாக கோவிலுக்கு வாகனத்துடன் சென்ற அய்யப்ப பக்தர்களை வனத்துறையினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சண்முகநாதன் கோவில் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி பகுதியில் சண்முகாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மேல் புறத்தில் சுமார் 100 ஆண்டுகள்

Update: 2016-12-16 22:00 GMT

உத்தமபாளையம்,

வனப்பகுதி வழியாக கோவிலுக்கு வாகனத்துடன் சென்ற அய்யப்ப பக்தர்களை வனத்துறையினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சண்முகநாதன் கோவில்

உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி பகுதியில் சண்முகாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மேல் புறத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான சண்முகநாதன் கோவில் உள்ளது. அணைப்பட்டி, கம்பம், காமயகவுண்டன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம், உத்தமபாளையம், சின்னமனூர், சின்னஓவுலாபுரம், சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்களில் அதிக அளவில் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இக்கோவிலுக்கு செல்ல ராயப்பன்பட்டி, அணைப்பட்டி வழியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 வழிகளும் சங்கமிக்கும் இடத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதை வனப்பகுதியாக உள்ளது. இந்த பாதை வழியாகத்தான் பக்தர்கள் பல ஆண்டுகளாக கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோவிலில் திருப்பணி நடைபெற உள்ளது. இதற்கான பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ராயப்பன்பட்டி, அணைப்பட்டி பாதைகள் வழியாக வந்து பின்னர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதை வழியாக தான் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

வாக்குவாதம்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பாதை வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் அந்த பாதையில் கற்களும் நட்டு வைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி கடந்த மாதம் கோவிலுக்கு காரில் சென்றார். அப்போது வனத்துறையினர் பாதையை திறந்து விட்டனர். அதையடுத்து பக்தர்கள் அந்த பாதையை பயன்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று சின்னமனூரை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் சண்முகநாதன் கோவிலுக்கு அன்னதானம் வழங்குவதற்காக வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களுடைய வாகனத்தை வனத்துறையினர் மறித்தனர். இதனால் பக்தர்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ராயப்பன்பட்டி சப்–இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை தலைச்சுமையாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்–அமைச்சரிடம் மனு

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பாதை அடர்ந்த வனப்பகுதி கிடையாது. இங்கு விலை உயர்ந்த மரங்களும் இல்லை. முள் காடாக தான் உள்ளது. ஆனாலும் பக்தர்கள் அந்த பாதையை பயன்படுத்த வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் விரைவில் தீர்வு அளிக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் இது தொடர்பாக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் நேரில் சந்தித்து மனு அளிப்போம் என்றனர்.

மேலும் செய்திகள்