பணத்தட்டுப்பாடு காரணமாக ஊட்டியில் மூடிக்கிடக்கும் ஏ.டி.எம். மையங்கள் பொதுமக்கள் அவதி

பணத்தட்டுப்பாடு காரணமாக ஊட்டியில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. மேலும் வங்கிகளிலும் பணம் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வர்த்தகம் பாதிப்பு மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து

Update: 2016-12-16 22:30 GMT

ஊட்டி,

பணத்தட்டுப்பாடு காரணமாக ஊட்டியில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. மேலும் வங்கிகளிலும் பணம் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

வர்த்தகம் பாதிப்பு

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொழிலான தேயிலை தொழில் கடும் பாதிப்படைந்துள்ளது. மேலும் ஊட்டியில் காய்கறி வியாபாரம் உள்பட அனைத்து வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களும் சம்பளம் பெற முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது சம்பள பணத்தை எடுக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். வங்கிகளில் கால் வலிக்க காத்து நின்ற போதிலும் கூட சிலருக்கு பணம் கிடைப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏ.டி.எம். மையங்களும் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் திண்டாட்டம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

98 சதவீதம்

ஊட்டி நகரில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் சார்பில் ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 98 சதவீத ஏ.டி.எம். மையங்கள் செயல்படுவது இல்லை. இவைகள் எப்போதும் மூடப்பட்டு கிடக்கின்றன. ஒரு சில ஏ.டி.எம்.களில் மட்டும் மாலை நேரத்தில் பணம் வைக்கப்படுகிறது. இவ்வாறு பணம் வைக்கப்பட்ட சில மணி நேரத்தில் பொதுமக்கள் எடுத்துவிடுவதால் பணம் விரைவாக காலியாகி விடுகிறது. பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள மத்திய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், மார்க்கெட் போன்ற இடங்களில் உள்ள ஏ.டி.எம்.கள் செயல்பட்டு பல வாரங்களை கடந்து விட்டன.

இந்த பகுதியில் ஒரு சில ஏ.டி.எம். எந்திரங்களிலாவது பணம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.டி.எம்.களில்தான் பணம் இல்லை எனவே வங்கியில் நேரில் சென்று வாங்கலாம் என்றால் நீண்ட வரிசையில் சில மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு கால்வலிக்க காத்து நின்றாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் பணம் காலியாகி விட்டது நாளைக்கு வாருங்கள் என்று கூறுகின்றனர்.

மேலும் வங்கி கணக்கு புத்தகத்தை பயன்படுத்தி பணம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் மட்டுமே பணம் தர முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுதவிர காசோலை மூலம் மட்டுமே நாள்ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் பணம் எடுக்க முடிகிறது. எனவே பணத்தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சிக்னல் கிடைப்பது இல்லை

இதனிடையே கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணப்பரிமாற்றத்துக்காக ‘சுவைப்’ கருவிகள் உள்ளன. ஆனால் ஊட்டி பகுதியில் இணையதளம் வேகம் குறைவு, சிக்னல் கிடைப்பது இல்லை என்பது உள்பட பல்வேறு காரணங்களால் இந்த கருவிகளும் சரியாக வேலை செய்வது இல்லை. இதனால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

பொதுமக்களின் நிலை இப்படி என்றால் சுற்றுலா பயணிகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சுற்றி பார்க்க வந்த இடத்தில் ஏ.டி.எம்.களை தேடியே பாதி நேரம் போய்விடுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் பலர் சரியாக சாப்பிட கூட முடியாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் நிலை உள்ளது.

மேலும் செய்திகள்