திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

திருவண்ணாமலை வேங்கிக்காலில் டாஸ்மாக் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். டாஸ்மாக் ஊழியர் திருவண்ணாமலை வேங்கிக்கால் கணேசன் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). செங்கம் அருகேயுள்ள குயிலம் டாஸ்

Update: 2016-12-17 22:15 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்காலில் டாஸ்மாக் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

டாஸ்மாக் ஊழியர்

திருவண்ணாமலை வேங்கிக்கால் கணேசன் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). செங்கம் அருகேயுள்ள குயிலம் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். சரவணனுக்கு திருவண்ணாமலை தாமரை நகர் அண்ணாநகரில் மற்றொரு வீடு உள்ளது. கடந்த 15–ந்தேதி சரவணன், கணேசன் நகரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அண்ணாநகரில் உள்ள வீட்டில் இரவு தங்கி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு சரவணன், கணேசன் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

11 பவுன் நகை திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு அறைகளில் பொருட்கள், துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இதுதொடர்பாக திருவண்ணாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடரும் திருட்டு சம்பவங்கள்

திருவண்ணாமலை வேங்கிக்காலில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 11–ந்தேதி இரவு திருவண்ணாமலை வேங்கிக்கால் அசோக் நகரை சேர்ந்த மின்வாரிய அதிகாரி ராஜேந்திரன் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 17 பவுன் நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்கையும், கடந்த 12–ந்தேதி இரவு மகா தீபத்தன்று கிரிவலம் சென்ற வேங்கிக்கால் மனோரஞ்சிதம் நகரை சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் முருகன் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் திருடி சென்றுள்ளனர். தற்போது நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் ஊழியர் சரவணன் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

வேங்கிக்கால் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதால் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் வேங்கிக்கால் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்