பூனை குறுக்கே வந்ததால் ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்த இளம்பெண் சாவு

பொங்கலூர் அருகே பூனை குறுக்கே வந்ததால் ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– இளம்பெண் பொங்கலூர் அருகே உள்ள இடையபட்டியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் ரம்யா(வயது

Update: 2016-12-17 22:15 GMT

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே பூனை குறுக்கே வந்ததால் ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

இளம்பெண்

பொங்கலூர் அருகே உள்ள இடையபட்டியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் ரம்யா(வயது 22). இவர் வாவிபாளையம் ஊராட்சி கழுவேரிபாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் செயல்படும் பொதுசேவை மையத்தில் கணினி ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார்.

தினமும் ரம்யாவை அவருடைய தாய்மாமன் தங்கவேல் என்பவர் இடையபட்டியில் இருந்து கழுவேரிபாளையத்திற்கு தனது ஸ்கூட்டரில் கொண்டு வந்து விட்டு செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் இருவரும் புத்தெரிச்சல் வழியாக கழுவேரிபாளையத்திற்கு வந்துகொண்டு இருந்தனர். ஸ்கூட்டரை தங்கவேல் ஓட்டினார். பின் இருக்கையில் ரம்யா அமர்ந்து இருந்தார். கழுவேரிபாளையத்திற்கு சற்று தொலைவில் ஸ்கூட்டர் வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே திடீரென்று பூனை ஒன்று சென்றுள்ளது.

சாவு

அப்போது பூனையின் மீது மோதாமல் இருக்க ஸ்கூட்டரை தங்கவேல் திருப்பினார். இதில் ஸ்கூட்டர் நிலைதடுமாறியதில் இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் ரம்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தங்கவேல் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் 2 பேரையும் மீட்டு பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ரம்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

லேசான காயம்அடைந்த தங்கவேல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்