சென்னை புறநகர் பகுதிகளில் குடிநீர், மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை புறநகர் பகுதிகளில் குடிநீர், மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்சாரம்–குடிநீர் ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்ததால் குடிநீர், மின்வினியோகம் பாதிக்கப்பட்டு உள்

Update: 2016-12-17 23:30 GMT

செங்குன்றம்,

சென்னை புறநகர் பகுதிகளில் குடிநீர், மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின்சாரம்–குடிநீர்

‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்ததால் குடிநீர், மின்வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. 5 நாட்களுக்கு மேல் ஆகியும் பல இடங்களில் இன்னும் மின்சாரம், குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதை கண்டித்து சென்னை புறநகர் பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பாடியநல்லூர் ஊராட்சி

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஏ.நகர் பகுதியைச் சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு நேற்று காலை செங்குன்றம்–திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஆலமரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்குன்றம் போலீசார் அவர்களை சமரசம் செய்து வைத்தனர்.

இதேபோல் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நினைவு நகர் பகுதி பொது மக்கள் செங்குன்றம்–திருவள்ளூர் சாலையில் பழைய விமான நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சோழவரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

செங்குன்றம்

செங்குன்றம் பிள்ளையார்கோவில் தெருவைச்சேர்ந்த பொதுமக்கள் 300 பேர் நேற்று மதியம் செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் பஜார் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்குன்றம் போலீசார் மற்றும் மின்வாரிய உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் விரைவில் மின்வினியோகம் செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த பகுதியில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

இதேபோல் செங்குன்றம் அடுத்த சாமியார் மடம் பகுதி மக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை செங்குன்றம் போலீசார் சமாதானம் செய்தனர். பின்னர் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மணலி

மணலி மண்டலம் 18, 20, 21 ஆகிய வார்டுகளில் மின்சாரம், குடிநீர் இல்லாததை கண்டித்தும், குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை கண்டித்தும் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு மணலி பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் செல்வக்குமார் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் மணலி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், மின்சாரம் கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.

அமைச்சர் பேச்சுவார்த்தை

மணலி எம்.ஜி.ஆர்.நகர், நெடுஞ்செழியன் சாலை, ராகவன் தெரு, பாடசாலை தெரு உள்ளிட்ட இடங்களில் நேற்று மின்சாரம், குடிநீர் கேட்டு அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாடசாலை தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் கருப்பண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து கரூரில் இருந்து வந்த 300 தொழிலாளர்கள் மணலி மண்டல பகுதியில் தங்கி துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நங்கநல்லூர்

சென்னையை அடுத்த நங்கநல்லூர் 5–வது பிரதான சாலையில் ஏராளமான பொதுமக்களும், நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் உள்வட்ட சாலையில் பெண்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.

பழவந்தாங்கல் பகுதியில் மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பழவந்தாங்கல் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

சேலையூர்

சென்னையை அடுத்த சேலையூர் பகுதியில் மின்சாரம் வராததை கண்டித்து 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேலையூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சேலையூர் போலீஸ் நிலையம் அருகே வேளச்சேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விரைவில் மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் தாம்பரம் முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர், மாடம்பாக்கம், படுவஞ்சேரி, மப்பேடு, தாம்பரம் கடப்பேரி, குரோம்பேட்டை ராதாநகர் மற்றும் பம்மலில் ஒரு சில பகுதிகளில் இதுவரையில் மின்சாரம் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.

நெமிலிச்சேரி

ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி, நாகாத்தம்மன் நகர், சீனிவாசா நகர், அண்ணா நகர், எம்.ஜி.ஆர் நகர், பிரகாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சுமார் 300 பேர் நேற்று காலை பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அருகே சி.டி.எச். சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியன் பொதுமக்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தார். பின்னர் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடுங்கையூர்

கொடுங்கையூரை அடுத்த சேலையூர் பகுதி, கொய்யாதோப்பு, சோலையம்மன் கோவில், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம், குடிநீர் கேட்டு நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொடுங்கையூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து வைத்தனர்.


மேலும் செய்திகள்