அகஸ்தீஸ்வரம் அருகே ஓலை பாரம் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து போக்குவரத்து பாதிப்பு

அகஸ்தீஸ்வரம் அருகே ஓலை பாரம் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து போக்குவரத்து பாதிப்பு

Update: 2016-12-18 23:00 GMT
கன்னியாகுமரி,

அகஸ்தீஸ்வரம் அருகே ஓலை பாரம் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து நடந்தது. இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த தீவிபத்து பற்றிய விவரம் வருமாறு:-

லாரியில் தீ விபத்து

நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியில் இருந்து நேற்று மாலை 3.45 மணிக்கு ஓலை பாரத்தை ஏற்றிக்கொண்டு அந்த லாரி சென்னைக்கு புறப்பட்டது. அதை அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சரவணந்தேரியை சேர்ந்த சுடலைமணி (வயது 35) என்பவர் ஓட்டினார். மேலும் கிளனர் ஒருவரும் உடன் இருந்தார்.

விவேகானந்தபுரத்தை அடுத்த ஒற்றைப்புளி அருகே செல்லும் போது, ரோட்டின் குறுக்கே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓலை உரசியதால், உடனே ஓலையில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதை பார்த்த பொது மக்கள், லாரியில் தீப்பிடித்துள்ளதாக டிரைவரிடம் கூறினார்கள். உடனே லாரியை நிறுத்தி விட்டு, டிரைவரும், கிளனரும் கீழே இறங்கி ஓடி விட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

உடனே பொது மக்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அதிகாரி சத்தியகுமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைப்பதில் ஈடுபட்டனர். மேலும் நாகர்கோவிலில் இருந்தும் தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டது. தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொது மக்கள் உதவியுடன் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை.

இந்த தீ விபத்தால் கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்