புதுவை போக்குவரத்து போலீஸ்காரர் கொலையில் உறவினர் உள்பட 2 பேர் கைது

புதுவை போக்குவரத்து போலீஸ்காரர் கொலையில் உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். போக்குவரத்து போலீஸ்காரர் புதுவை போக்குவரத்து காவல்துறையில் போலீஸ்காரராக பணியாற்றியவர் அருணகிரி (வயது 35). இவரை கடந்த ஜனவரி மாதம் 10–ந்தேதி முதல் காணவில்லை. இதுகுறித

Update: 2016-12-18 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை போக்குவரத்து போலீஸ்காரர் கொலையில் உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போக்குவரத்து போலீஸ்காரர்

புதுவை போக்குவரத்து காவல்துறையில் போலீஸ்காரராக பணியாற்றியவர் அருணகிரி (வயது 35). இவரை கடந்த ஜனவரி மாதம் 10–ந்தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அவரது மனைவி நெய்ரோஜா லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் காணாமல் போனவர்கள் பற்றிய சட்ட பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் அருணகிரி பற்றி பல்வேறு தகவல்கள் பரவின. அவர் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. புதுவை சட்டமன்ற கூட்டத்தில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா, போலீஸ்காரர் அருணகிரி கூலிப்படையினரால் கடத்திக் கொலை செய்யப்பட்டு இருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

கிடுக்குப்பிடி விசாரணை

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ரக்ஷனாசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர்கள் வீரபுத்திரன், தயாளன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த தனிப்படையினருக்கு அருணகிரியின் சகலையான (மனைவியின் சகோதரி கணவர்) சிவானந்தம் ராபர்ட் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

2பேர் கைது

அப்போது சிவானந்தம் ராபர்ட் தனது கூட்டாளிகளான கடலூரைச் சேர்ந்த முத்துராஜ், வில்லியனூரைச் சேர்ந்த கருணாஜோதி ஆகியோருடன் சேர்ந்து போலீஸ்காரர் அருணகிரியை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிவானந்தம் ராபர்ட், முத்துராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை குறித்து டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் நிருபர்களிடம் கூறியதாவது:–

தவறான உறவு

சிவானந்தம் ராபர்ட்டின் மனைவியின் தங்கையை (நெய்ரோஜா) அருணகிரி திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தை சிவானந்தம் ராபர்ட் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார். பெருமளவு திருமண செலவினையும் அவர் ஏற்றுள்ளார். இந்தநிலையில் அருணகிரிக்கு 2 குழந்தைகளும் பிறந்தன.

இதற்கிடையே தனது மனைவியுடன் சிவானந்தம் ராபர்ட்டுக்கு தவறான உறவு இருப்பதாக அருணகிரி சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது சிவானந்தம் ராபர்ட்டை அருணகிரி தாக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அருணகிரியை தீர்த்துக்கட்ட சிவானந்தம் ராபர்ட் முடிவு செய்தார்.

மதுபாட்டிலால் தாக்கி கொலை

இதன்படி கடந்த ஜனவரி மாதம் 10–ந்தேதி தனது கூட்டாளிகளான முத்துராஜ், கருணாஜோதி ஆகியோரை அழைத்து அவர் திட்டம் தீட்டியுள்ளார். இதன்பின் அன்று மாலை சிவானந்தம் ராபர்ட் மது குடிக்க அழைத்ததை ஏற்று அருணகிரியும் சென்றுள்ளார்.

இவர்கள் தமிழக பகுதியான நாவற்குளம் (லாஸ்பேட்டை ஏர்போர்ட் பின்புறம்) பகுதிக்குச் சென்றனர். ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி அங்கு முத்துராஜ், கருணாஜோதி ஆகியோர் காத்திருந்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் சேர்ந்து அங்கு மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் அருணகிரியை சிவானந்தம் ராபர்ட் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மதுபாட்டிலால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கடலில் அஸ்தி கரைப்பு

பின்னர் அருணகிரியின் உடலை அங்கிருந்து காரில் ஏற்றிக்கொண்டு அவர்கள் கடலூருக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அருணகிரியின் உடலை சதீஷ்குமார், வெங்கட் ஆகியோரது உதவியுடன் எரித்து அஸ்தியை கடலூர் பழைய துறைமுக பகுதியில் கடலில் கரைத்துவிட்டனர்.

இந்த கொலையை செய்துவிட்டு சிவானந்தம் ராபர்ட் தனக்கு எதுவுமே தெரியாததுபோல் நடந்து கொண்டார். அருணகிரியின் மனைவிக்கும் அவர் ஆறுதல் கூறி வந்துள்ளார். மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதைத்தொடர்ந்து சிவானந்தம் ராபர்ட், அவரது கூட்டாளி முத்துராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட அருணகிரியின் மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது பிணத்தை ஏற்றிச் சென்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தகொலையில் தொடர்புடைய கருணாஜோதி, சதீஷ்குமார், வெங்கட் ஆகியோரை தேடி வருகிறோம்

இவ்வாறு டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் கூறினார்.

மேலும் செய்திகள்