நெல்லை சந்திப்பில் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் பாளை.யில் போராட்டம் நடத்த தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு

நெல்லை சந்திப்பில் ம.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாளை.யில் போராட்டம் நடத்த தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வைகோவுக்கு எதிர்ப்பு தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி

Update: 2016-12-18 23:58 GMT

நெல்லை

நெல்லை சந்திப்பில் ம.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாளை.யில் போராட்டம் நடத்த தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வைகோவுக்கு எதிர்ப்பு

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வைகோ கார் மீது கல், செருப்பு வீச்சு சம்பவம் நடந்தது.

போராட்டம்

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை ம.தி.மு.க.வினர் எரிக்க போவதாக தி.மு.க.வினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தி.மு.க. நிர்வாகிகள் பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் திரண்டனர். அவர்கள் வைகோ உருவ பொம்மையை எரிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது. 2 இடங்களிலும் போலீஸ் குவிக்கப்பட்டனர்.

வைகோவின் உருவ பொம்மையை எரிக்க கூடாது என தி.மு.க. தலைமை கழகம் உத்தரவிட்டது. இதையடுத்து தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.

ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஆனால் நெல்லை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு தி.மு.க.வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார், மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்