சென்னை, ஆந்திராவில் இருந்து விருத்தாசலத்திற்கு ரெயில் மூலம் 2 ஆயிரத்து 10 டன் உரம் வந்தது

சென்னை மற்றும் ஆந்திராவில் இருந்து 2 ஆயிரத்து 10 டன் உரம் விருத்தாசலத்திற்கு வந்தது. சம்பா சாகுபடி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தற்போது சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். மேலும் காய்கறி பயிர்கள், மலர் வகை பயிர்களையும்

Update: 2016-12-19 23:00 GMT

விருத்தாசலம்,

சென்னை மற்றும் ஆந்திராவில் இருந்து 2 ஆயிரத்து 10 டன் உரம் விருத்தாசலத்திற்கு வந்தது.

சம்பா சாகுபடி

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தற்போது சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். மேலும் காய்கறி பயிர்கள், மலர் வகை பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக தூத்துக்குடி, சென்னை மணலி, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள உர நிறுவனங்களில் இருந்து யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை மொத்தமாக கொள்முதல் செய்கிறது. பின்னர் அதனை மாவட்டத்தில் உள்ள உரக்கிடங்குகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்து வருகிறது.

யூரியா உரம்

இந்த நிலையில் தற்போது விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சென்னை மணலியில் உள்ள ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து 760 டன் யூரியா உரத்தை கொள்முதல் செய்தது. இவை சரக்கு ரெயில் மூலம் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதேபோல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இப்கோ உர நிறுவனத்தில் இருந்தும் நேற்று ஆயிரத்து 250 டன் யூரியா விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு ரெயிலில் வந்திறங்கியது. இதையடுத்து இந்த உர மூட்டைகளை அங்கிருந்த தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் பெரும்பாலான உரமூட்டைகள் விருத்தாசலம் அரசு சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்