ஈரோடு கதிரம்பட்டி பகுதியில் 173 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

ஈரோடு கதிரம்பட்டி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 173 வீடுகள் 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவு தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஈரோடு மா

Update: 2016-12-19 22:00 GMT

ஈரோடு,

ஈரோடு கதிரம்பட்டி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 173 வீடுகள் 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் மற்றும் மழைநீர் ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் கலந்து கதிரம்பட்டி வழியாக சூரம்பட்டி அணைக்கட்டுக்கு வந்து பின்னர் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் பாசனத்துக்காக விடப்படுகிறது.

இந்த ஓடையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அதிக அளவில் இருந்தது. அதனால் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை அகற்ற மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார். முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 542 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. அதன்பின்னர் 2–ம் கட்டமாக சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 124 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

173 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

அதைத்தொடர்ந்து 3–வது கட்டமாக கதிரம்பட்டி மணல்மேடு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 173 வீடுகளை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதற்காக அங்கு குடியிருந்தவர்களிடம் வீடுகளை காலிசெய்யும்படி நோட்டீசு வழங்கப்பட்டது. பின்னர் அங்கு குடியிருந்தவர்கள் வீடுகளில் இருந்த ஜன்னல், கதவு உள்பட மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களை எடுத்து மாற்று இடத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி 173 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றும் பணி ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி தலைமையில் நேற்று நடந்தது. இதற்காக 5 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த பொக்லைன் எந்திரங்கள் மூலம் அனைத்து வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்போது முன்பு அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் தங்கள் வீடுகள் இடிக்கப்படுகிறதே என்று கண்கலங்கினார்கள். ஒருசிலர் தங்கள் வீடுகளை இடிக்கும்போது கதறி அழுதனர்.

50 பேருக்கு மாற்று இடம்

இதுகுறித்து ஆர்.டி.ஓ. நர்மதாதேவி கூறும்போது, ‘ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று (நேற்று) 173 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றும் பணி நடக்கிறது. இங்கு குடியிருந்தவர்களில் 50 பேருக்கு சித்தோடு அருகே உள்ள நல்லாகவுண்டம்பாளையம் பகுதியில் இலவச வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டு உள்ளது. மேலும் தகுதி உள்ளவர்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருள், ஈஸ்வரன், சிவக்குமார் உள்பட 100–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்