பழனிக்கு உறவினரை பார்க்க வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் தங்க சங்கிலி அபேஸ் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பழனிக்கு உறவினரை பார்க்க வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் தங்க சங்கிலியை அபேஸ் செய்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– உறவினர் வீட்டிற்கு வந்த மூதாட்டி தேனி மாவட்டம் பெரியகுளத்த

Update: 2016-12-19 22:00 GMT

பழனி,

பழனிக்கு உறவினரை பார்க்க வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் தங்க சங்கிலியை அபேஸ் செய்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

உறவினர் வீட்டிற்கு வந்த மூதாட்டி

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் காரணமூர்த்தி. இவருடைய மனைவி ஜோதிமணி (வயது 62). நேற்று இவர் பழனிக்கு வந்தார். பின்னர் பழைய தாராபுரம் ரோட்டில் உள்ள சிவகுரு நாடார் தெருவில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

மூதாட்டி அருகே வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர்கள், அவரிடம் பேச்சுக்கொடுத்தனர். அப்போது அவர் தேனியில் இருந்து பழனிக்கு வந்தது அவர்களுக்கு தெரிந்தது. உடனே பழனியில் தற்போது வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தனியாக நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை பறித்துச்சென்றுவிடுகிறார்கள் என்று கூறியுள்ளனர்.

தங்க சங்கிலி அபேஸ்

இதனால் ஜோதிமணி பதற்றமடைந்தார். இதை நோட்டமிட்ட அவர்கள் பயப்பட வேண்டாம் நாங்கள் நகையை பத்திரப்படுத்தி தருகிறோம் என்று கூறி அவருடைய கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றித்தரும்படி கூறியுள்ளனர். அவரும் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அதனை ஒரு தாளில் வைத்து பொட்டலமாக மடித்து மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து உறவினரின் வீட்டிற்கு சென்ற மூதாட்டி தன்னிடம் உள்ள பொட்டலத்தை பிரித்து பார்த்துள்ளார். அப்போது அதில் நகைக்கு பதிலாக கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுதார். பின்னர் தான் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டு 7 பவுன் தங்க சங்கிலியை அபேஸ் செய்து சென்றது அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து பழனி நகர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்