ஊட்டி பட்பயர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை

ஊட்டி பட்பயர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். விழிப்புணர்வு கூட்டம் ஊட்டி அருகே பட்பயர் கருப்புமண்விளை பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுப்பது தொடர்பாகவும், போக்குவரத்து ந

Update: 2016-12-19 21:45 GMT

ஊட்டி,

ஊட்டி பட்பயர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

விழிப்புணர்வு கூட்டம்

ஊட்டி அருகே பட்பயர் கருப்புமண்விளை பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுப்பது தொடர்பாகவும், போக்குவரத்து நெரிசலை தடுப்பது தொடர்பாகவும் போலீசார் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிராம தலைவர் நாதன் தலைமை தாங்கினார். வக்கீல் விஜயன், பாபு உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி பேசும் போது கூறியதாவது:–

ஊட்டி பட்பயர் கருப்புமண்விளை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் அருகில் உள்ள வீடுகளில் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை பொதுமக்களாகிய நீங்கள் செய்து கொடுக்க வேண்டும்.

மாணவர்கள் இந்த பகுதியை சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்துவதோடு, அவர்களை கண்காணிக்கவும் வேண்டும். மாணவர்களும் நன்றாக படித்து விட்டு செல்லுங்கள். ஏதாவது ஒரு குற்றச்சம்பவத்தில் நீங்கள் ஈடுபட்டால், அந்த வழக்கில் நாங்கள் உங்களது பெயரை பதிவு செய்தால் உங்களது வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும்.

போக்குவரத்துக்கு இடையூறு

மேலும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்டவற்றை வாங்கி கொடுங்கள். ஆனால் நவீன செல்போன்களை வாங்கி கொடுக்காதீர்கள். பட்பயர் பகுதியில் இருந்து ஊட்டி மெயின் ரோட்டுக்கு செல்லும் சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு காரணம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவது தான்.

எனவே பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது. மேலும் பொதுமக்கள், போலீசாரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கூட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்