மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் உடனே தேர்தலை நடத்த கோரிக்கை

சாலையோர வியாபாரிகள் குழு தேர்தலை உடனே நடத்தக்கோரி நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உறுப்பினர்கள் தேர்தல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட ராமப்பகவுடர் ரோடு, அ

Update: 2016-12-19 22:00 GMT

மேட்டுப்பாளையம்,

சாலையோர வியாபாரிகள் குழு தேர்தலை உடனே நடத்தக்கோரி நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறுப்பினர்கள் தேர்தல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட ராமப்பகவுடர் ரோடு, அண்ணாஜிராவ் ரோடு, பெண்கள் மேனிலைப்பள்ளி ரோடு, பஸ் நிலையம், அரசு மருத்துவமனை முன்பு, காரமடை ரோடு, பாரத் பவன் ரோடு ஆகிய பகுதிகளில் 500–க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் நடைபாதை ஓரங்களில் பழவகைகள், காய்கறி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் கடந்த 2012–ம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி 182 பேர் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களாக இருந்தனர். அதன்பின்னர் நடைபாதை வியாபாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தபோதும், நகராட்சி நிர்வாகம் ஆய்வு பணியை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி சாலையோர வியாபாரிகள் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் செய்து வந்தது.

தள்ளி வைக்க கோரி மனு

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30–ந் தேதி தொடங்கி 5–ந் தேதி வரை நடந்தது. இதையடுத்து 7–ந் தேதி வேட்புமனுக்கல் பரிசீலனை, 8–ந் தேதி மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. கடைசியாக 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து 130 பேர் கொண்ட இறுதிபட்டியலும் வெளியிடப்பட்டது.

நகராட்சி நிர்வாகம் நடைபாதை வியாபாரிகள் உறுப்பினர்களாக அவகாசம் அளித்தபோதும், வியாபாரிகள் அதை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் தேசிய சாலையோர வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நந்தகுமாரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில் விடுபட்ட சாலையோர வியாபாரிகளையும் கண்டறிந்து பட்டியலை வெளியிட்டு ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும். அதுவரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதனை வலியுறுத்தி பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது.

முற்றுகை போராட்டம்

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சி.ஐ.டி.யு., எஸ்.டி.டி.யு. ஆகிய தொழிற்சங்களை சேர்ந்த நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் 200–க்கும் மேற்பட்டோர் உடனே தேர்தலை நடத்தக்கோரி நேற்று காலை 11 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டன.

உடனே நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நந்தகுமார், சி.ஐ.டி.யு. தாலுகா செயலாளர் பாஷா, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் வைட்பாபு, எஸ்.டி.டி.யு. மாவட்ட தலைவர் அசனார் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். குறிப்பிட்ட தேதியில் தேர்தலை நடத்தாவிட்டால் சாலையோர சிறு வியாபாரிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். போராட்டத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்