நாகர்கோவிலில் ‘காயகல்ப்’ விருது வழங்குவது தொடர்பான பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவிலில் ‘காயகல்ப்’ விருது வழங்குவது தொடர்பான பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2016-12-19 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ‘காயகல்ப்’ விருது வழங்குவது தொடர்பான பயிற்சியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார்.

பயிற்சி

மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சிகிச்சையின் தரம், சுற்றுப்புறச்சூழல் சுகாதாரம் மேம்படுத்துதல் மற்றும் தொற்றுநோய் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக மத்திய அரசால் ‘காயகல்ப்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவமனைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான குமரி மாவட்ட அளவிலான பயிற்சி கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த பயிற்சியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

பாடுபட வேண்டும்

மருத்துவமனை பராமரிப்பு, துப்புரவு மற்றும் சுகாதாரம், கழிவு மேலாண்மை, தொற்றுநோய் கட்டுப்பாடு, ஆதரவு சேவைகள், சுகாதார மேம்பாடு போன்ற விருதுக்காக தேர்வு செய்யப்படும் மருத்துவமனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல்் பரிசாக ரூ.50 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.20 லட்சமும், ஆறுதல் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் நமது மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மருத்துவ அதிகாரிகளும், செவிலியர்களும் நமது மாவட்டத்திற்கு இவ்விருது கிடைத்திட அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

பயிற்சியில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வசந்தி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரியாஸ் அகமது, டாக்டர் மாதவன் மற்றும் மாவட்ட மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

குறைதீர்க்கும் முகாம்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்களில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது குறைகளை தீர்த்துவைக்கக் கோரியும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்டர் கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்