நாங்குநேரியில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்

நாங்குநேரியில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய கைதி பிடிபட்டார். அவரை போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

Update: 2016-12-20 20:00 GMT
ஏர்வாடி,

நாங்குநேரியில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய கைதி பிடிபட்டார். அவரை போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

கைதி தப்பி ஓட்டம்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் கீழூரை சேர்ந்தவர், மூக்கன் மகன் ஜெயராமன் (வயது 31). அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (52). இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஜெயராமன், பாலகிருஷ்ணனை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திவாகரன் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் ஜெயராமனை கைது செய்தார். பின்னர் இரவில் போலீசார் அவரை நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டு சென்றனர்.

நாங்குநேரி இசக்கியம்மன் கோவில் அருகே நடந்து சென்றபோது, ஜெயராமன் போலீசாரின் பிடியில் இருந்து கையை உதறி விட்டு தப்பி ஓடினார். உடனே போலீசார் விரட்டிச் சென்றும், அவரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவுப்படி, ஏர்வாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு ஜெயராமனை தீவிரமாக தேடினர்.

ஜெயிலில் அடைப்பு

அதன்படி நள்ளிரவில் தளபதிசமுத்திரத்தில் பதுங்கியிருந்த ஜெயராமனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் நேற்று காலையில் நாங்குநேரி கோர்ட்டில் ஜெயராமன் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்