கே.வி.பி.புரம் அருகே முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி சாலை மறியல் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

கே.வி.பி.புரம் அருகே முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி சாலை மறியல் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

Update: 2016-12-20 22:45 GMT
ஸ்ரீகாளஹஸ்தி,

கே.வி.பி.புரம் அருகே முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி வயது முதிர்ந்த ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

உதவித்தொகை


கே.வி.பி.புரம் மண்டலம் ராஜுலகண்டிகை பகுதியில் கடந்த 20 நாட்களாக முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதுபற்றி முதியோர்கள், சம்பந்தப்பட்ட நபரிடம் சென்று கேட்டால், ‘உங்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்’ எனப் பதில் அளித்து வந்தனர்.

முதியோர்கள் ஒரு வாரத்துக்குப் பிறகு சென்று மீண்டும் கேட்டால், பஞ்சாயத்து அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது, பணம் வழங்கும் தேதி விவரத்தை தெரிவிக்கிறோம், பயனாளிகள் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி வந்தனர். இவ்வாறாக பல்வேறு காரணங்களை கூறி, காலம் கடத்தி முதியோர்களை அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியல்


இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் கே.வி.பி.புரம் மண்டலம் ராஜுலகண்டிகை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு அருகில் பிச்சாட்டூர்–ஸ்ரீகாளஹஸ்தி சாலையில் வயது முதிர்ந்த ஆண்களும், பெண்களும் அமர்ந்து நண்பகல் 12 மணிவரை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், கே.வி.பி.புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததும், சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று முதியோர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்