தர்மபுரி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவோயிஸ்ட் கைதி ஆஜர்

தர்மபுரி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவோயிஸ்ட் கைதி ஆஜர்

Update: 2016-12-20 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவோயிஸ்ட் கைதி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

மாவோயிஸ்ட் கைதி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 60). நக்சல் ஆதரவாளரான இவர் கடந்த 2001-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நக்சல் அமைப்பு நிர்வாகி சுந்தரமூர்த்தி என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2001-ம் ஆண்டு மதிகோன்பாளையம் போலீசார் மகாலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழகத்தின் சில பகுதிகளில் மகாலிங்கம் மீது வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டு மாவோயிஸ்டாக மாறிய மகாலிங்கம் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவரை கடந்த ஆகஸ்டு மாதம் கேரளாவில் தமிழக போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

கோர்ட்டில் ஆஜர்

இந்த நிலையில் நக்சல் அமைப்பை சேர்ந்த சுந்தரமூர்த்திக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கு, தர்மபுரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக மதுரையில் இருந்து மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த கைதியான மகாலிங்கத்தை துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் தர்மபுரிக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதனால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளி வைத்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மகாலிங்கம் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்