எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 168 குழந்தைகளுக்கு ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் கல்வி உதவித்தொகை கலெக்டர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 168 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ராஜேஷ் கூறினார். உலக எய்ட்ஸ் தினம் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டிபி.ராஜ

Update: 2016-12-20 22:30 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 168 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ராஜேஷ் கூறினார்.

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டிபி.ராஜேஷ் தலைமையில் அனைத்து அலுவலர்களும் நேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜேஷ் பேசியதாவது:–

கடலூர் மாவட்டத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் 25 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்களும்(நம்பிக்கை மையங்கள்), அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 47 எளிதாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்களும் செயல்படுகின்றன. மேலும் 2 ஏ.ஆர்.டி கூட்டுமருந்து சிகிச்சை மையங்களும், 4 சுகவாழ்வு மையங்களும், 8 இணைப்பு ஏ.ஆர்.டி கூட்டு மருந்து சிகிச்சை மையங்களும் செயல்படுகின்றன.

கல்வி உதவித்தொகை

மேலும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் இந்த நிதி ஆண்டில் ஆதரவற்ற மற்றும் எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 168 குழந்தைகளுக்கு 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு கலெக்டர் ராஜேஷ் பேசினார்.

பின்னர் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் உயர்கல்வி பயிலும் இரண்டு மாணவிகளுக்கு தலா 1000 ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, இணை இயக்குநர்(மருத்துவ பணிகள்) டாக்டர் எஸ்.மாதவி, துணை இயக்குநர் டாக்டர் ஜவஹர்லால், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளர் முகமது பாருக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்