நாட்டின் எதிர்காலத்துக்கு அவசியமான திட்டம்: புதுவையில் பணம் இல்லா வர்த்தக முறையை அமல்படுத்துவது எளிது கவர்னர் பேட்டி

பணம் இல்லா வர்த்தக முறை நாட்டின் எதிர்காலத்துக்கு அவசியமான திட்டம். இதை புதுவையில் அமல்படுத்துவது எளிதானது என்று கவர்னர் கிரண்பெடி கூறினார். செயல்விளக்க நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நேற்று மாலை பணமில்லா பரிவர்த்தனை குறித்த பயிற்சி மற்று

Update: 2016-12-20 22:45 GMT

புதுச்சேரி,

பணம் இல்லா வர்த்தக முறை நாட்டின் எதிர்காலத்துக்கு அவசியமான திட்டம். இதை புதுவையில் அமல்படுத்துவது எளிதானது என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

செயல்விளக்க நிகழ்ச்சி

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நேற்று மாலை பணமில்லா பரிவர்த்தனை குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணமில்லா பரிவர்த்தனை குறித்து கவர்னர் கிரண்பெடி செயல்விளக்கம் செய்து காட்டினார். அப்போது அவர் பேசியதாவது:–

ஊழலை ஒழிக்க முடியும்

நாட்டிலேயே புதுவை தான் அதிக எழுத்தறிவு கொண்ட மாநிலம் ஆகும். சிறிய மாநிலமான புதுச்சேரியில் அதிகம் பேர் ஆதார் கார்டு வைத்துள்ளனர். வங்கி கணக்கும் தொடங்கி உள்ளனர். டெபிட், கிரெடிட் கார்டுகளையும் அதிகம் பேர் வைத்துள்ளனர். எனவே புதுவை மாநிலத்தில் பணம் இல்லா பரிவர்த்தனையை எளிதாக அமல்படுத்த முடியும்.

முதலில் இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மாற வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்களிடம் அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குடும்பத்தில் ஒருவர் பணமில்லா பரிவர்த்தனை பற்றி அறிந்து இருந்தால் அவர்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும், நண்பர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.

பணமில்லா பரிவர்த்தனைக்கு முழுமையாக மாற வேண்டும் என்பது அவசியம் இல்லை. பணத்தை அதிக அளவில் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். இதன் மூலம் வெளிப்படையான நிதி மேலாண்மையை கொண்டு வர முடியும். ஊழல், முறைகேடு, லஞ்சத்தை ஒழிக்க முடியும்.

மாற வேண்டும்

புதுவை அரசின் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு பணத்தை நேரடியாக வழங்காமல் வங்கிகள் மூலமாக வழங்க வேண்டும். வங்கிகள் மூலம் நடந்த பண பரிவர்த்தனை குறித்த விவரங்களை மத்திய உள்துறைக்கு தலைமை செயலாளர் தினமும் அறிக்கை அனுப்ப வேண்டும். ஆகையால் மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசை அதிக அளவில் சார்ந்து இருப்பதால் பணமில்லா பரிவர்த்தனைக்கு நாம் மாற வேண்டும். கவர்னர் மாளிகையில் உள்ள ஊழியர்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்துள்ளனர்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

நிகழ்ச்சியில் வளர்ச்சி ஆணையர் நரேந்திகுமார், அரசுத்துறை செயலாளர்கள் கந்தவேலு, மிகிர்வர்தன், அருண்தேசாய், கவர்னர் சிறப்பு செயலாளர் தேவநீதிதாஸ் மற்றும் அனைத்து துறை இயக்குனர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டிஜிட்டல் மயமாக்க வேண்டும்

நாட்டு நலனுக்கு எதெல்லாம் நல்லதோ அதெல்லாம் சாத்தியம் தான். எதிர்கால தலைமுறைக்கு இந்த பணமில்லா பரிவர்த்தனை அவசியமானது. செல்போன், எஸ்.எம்.எஸ். முகநூல், சமூகவலைதளம் போன்றவற்றையெல்லாம் மக்கள் பயப்படுத்தவில்லையா? அதுபோன்று இந்த தொழில் நுட்பத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

பணப்பரிமாற்றத்தை முற்றிலும் நிறுத்தப்போவதில்லை. பணப்பரிவர்த்தனையை குறைப்பதே இதன் நோக்கமாகும். புதுவை கல்வி அறிவு அதிகம் உடைய மாநிலம். எனவே இங்கு பணமில்லா பரிவர்த்தனை என்பது சாத்தியமே. இதன் மூலம் சேமிக்கப்படும் பணம் நாட்டின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்புக்கு உதவும். புதுச்சேரியை நாட்டிலேயே முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை மாநிலமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கிரண்பெடி கூறினார்.

மேலும் செய்திகள்