விடுதியில் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து திருச்சியில் கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

விடுதியில் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து திருச்சியில் கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

Update: 2017-01-04 23:00 GMT
திருச்சி,

விடுதியில் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து திருச்சியில் கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

மாணவிகள் சாலை மறியல்

திருச்சி கிராப்பட்டியில் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் விடுதி உள்ளது. இதில் 120-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். விடுதியில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லையாம்.

இந்த நிலையில் விடுதியில் சுத்தமான குடிநீர் வசதி வழங்க வேண்டும், சுகாதாரமான உணவு வழங்க வேண்டும், மாலை நேர வகுப்பிற்கு செல்லும் மாணவிகளுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுக்க வேண்டும், சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும், 2 கழிப்பறைகள் மட்டும் இருப்பதால் கூடுலதாக கழிப்பறைகள் கூடுதலாக கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் நேற்று காலை 9 மணி அளவில் திருச்சி கிராப்பட்டியில் மதுரை சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதனால், அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் அலுவலகத்திற்கு செல்ல முயன்றவர்கள் செல்ல முடியவில்லை. இதனால் மாணவிகளிடம் நகர்ந்து செல்லுமாறு பொதுமக்கள் கூறினர். இதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து நியாயமான கோரிக்கையை கூறினர்.

இதற்கிடையில் மாணவிகள் போராட்டம் குறித்து தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகள் கூறுகையில், “விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி காப்பாளரிடம் பல முறை எடுத்துக்கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் வந்து பதில் அளிக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” என்றனர். இதற்கு அதிகாரிகளை வரவழைத்து நடவடிக்கை எடுக்க வைப்பதாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் போலீசார் அறிவுறுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை மாணவிகள் கைவிட்டு சற்று தள்ளி சாலையோரம் நின்றனர். மாணவிகள் போராட்டத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலரும் ஆதரவு கொடுத்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி முத்துவடிவேல் மற்றும் அரசு அதிகாரிகள் விரைந்து வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்கட்டமாக குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்வதாகவும், நாளை (வெள்ளிக்கிழமை) கட்டிடத்தில் சேதமடைந்த பகுதியை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். அதன்பின் பகல் 12 மணி அளவில் மாணவிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

மாணவிகளின் போராட்டத்தால் திருச்சி கிராப்பட்டியில் நேற்று காலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்