விக்கிரவாண்டி அருகே பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி மயங்கி விழுந்து சாவு

விக்கிரவாண்டி அருகே பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தார். விவசாயி விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழையை நம்பி விவசாயிகள் நெல், உளுந்து, மணிலா போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். ஆனால், நடப்பு ஆண்டு பருவமழை பொய்த்து

Update: 2017-01-15 23:00 GMT

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

விவசாயி

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழையை நம்பி விவசாயிகள் நெல், உளுந்து, மணிலா போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். ஆனால், நடப்பு ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருகிறது.

இந்த நிலையில், கருகிய பயிர்களை பார்த்து மனமுடைந்த விவசாயி ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன்விவரம் வருமாறு:–

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கொட்டியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 53), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் உளுந்து மற்றும் மணிலா பயிர்களை சாகுபடி செய்திருந்தார். சாகுபடி செய்திருந்த பயிர்கள் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கருகின. இதனால் மனமுடைந்த ரவி, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிர்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகிவிட்டதே என கடந்த சிலநாட்களாக தனது குடும்பத்தினரிடம் புலம்பி வந்துள்ளார்.

மயங்கி விழுந்து சாவு

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மாலை ரவி தனது விவசாய நிலத்துக்கு சென்றார். அங்கு கருகிய பயிர்களை பார்த்ததும் மனவேதனையடைந்த ரவி திடீரென அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ரவி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை அன்று பயிர்கள் கருகியதை பார்த்து மனவேதனையடைந்த விவசாயி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்