சென்னை ஈஞ்சம்பாக்கம் அருகே டிரைவரை தாக்கி காரை கடத்த முயன்ற கல்லூரி மாணவர் கைது

சென்னை ஈஞ்சம்பாக்கம் அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி, காரை கடத்த முயன்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-01-16 00:05 GMT
ஆலந்தூர்

சென்னை ஈஞ்சம்பாக்கம் அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி, காரை கடத்த முயன்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கால் டாக்சி நிறுவனம்

சென்னையில் உள்ள ஒரு தனியார் கால் டாக்சி நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் போன் செய்து, கோவளத்தில் இருந்து பெசன்ட்நகர் செல்வதற்கு கார் வேண்டும் என கேட்டார். அதன்பேரில் முரளிகிருஷ்ணன்(வயது 53) என்ற டிரைவர், காரை எடுத்துக்கொண்டு அதிகாலை 2.30 மணியளவில் அந்த வாலிபர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றார்.

அங்கு 4 வாலிபர்கள் காரில் ஏறி பெசன்ட்நகர் சென்றனர். அதிகாலை சுமார் 3.30 மணியளவில் கார் ஈஞ்சம்பாக்கம் அருகே சென்ற போது, காரில் இருந்தவர்கள், இங்கு நண்பர் ஒருவரை பார்க்க வேண்டும் என்று கூறி காரை நிறுத்தும்படி கூறினர்.

டிரைவர் முரளிகிருஷ்ணன், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் சந்திப்பு அருகே காரை நிறுத்தினார். காரில் இருந்த 2 பேர் கீழே இறங்கி சென்றனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் காரில் வந்து ஏறினர்.

டிரைவர் மீது தாக்குதல்


டிரைவர் காரை எடுக்க முயன்ற போது, திடீரென காரில் இருந்த வாலிபர்கள், டிரைவர் முரளிகிருஷ்ணனை தாக்கி, அவரது கழுத்தை சணல் கயிறால் இறுக்கினர். இதனால் மூச்சுத்திணறிய முரளிகிருஷ்ணன், கார் கதவை திறந்து கூச்சலிட்டார்.

அப்போது அந்த வழியாக கண்ணகிநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வாகனத்தில் ரோந்து வந்தனர். போலீசாரை கண்டதும் காரில் இருந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

அதில் ஒருவரை மட்டும் போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அவரையும், டிரைவர் முரளிகிருஷ்ணனையும் மீட்டு நீலாங்கரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

கல்லூரி மாணவர் கைது

அதில் பிடிபட்ட வாலிபர், சென்னை ராயபுரம் எம்.எஸ்.கோவில் தெருவைச் சேர்ந்த முகமது இர்பான்(20) என்பதும், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ.(அராபிக்) முதலாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

முகமது இர்பானின் நடவடிக்கைகள் சரி இல்லாததால் அவரது தந்தை அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதனால் அண்ணா சாலையில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வரும் தனது நண்பர் சுகேல் அகமது என்பவருடன் தங்கி இருந்தார்.

இந்தநிலையில் சுகேல் அகமது, முகமது இர்பான் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கோவளம் சென்றனர். பின்னர் சுகேல் அகமதுவின் நண்பர்கள் நிரோஷன் மற்றும் கல்யாண் ஆகியோரையும் கோவளத்துக்கு வரவழைத்து, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கால் டாக்சி காரை கடத்திச் சென்று ஆந்திர மாநிலம் தடா கொண்டு சென்று விற்று பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டினர்.

3 பேருக்கு வலைவீச்சு


இதற்காகவே கால் டாக்சியை வாடகைக்கு அழைத்துச்சென்று, டிரைவர் முரளிகிருஷ்ணனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்ய முயன்ற போது இரவு ரோந்து போலீசாரிடம் முகமது இர்பான் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய சுகேல் அகமது, நிரோஷன் மற்றும் கல்யாண் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நீலாங்கரை போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் கால் டாக்சி டிரைவரிடம் கேட்டறிந்தார். அப்போது அவரிடம் கால் டாக்சி டிரைவர் முரளிகிருஷ்ணன், போலீசாரால் தனது உயிர் காப்பாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். 

மேலும் செய்திகள்