அ.தி.மு.க. என்ற ஆலமரத்தை யாராலும் வீழ்த்த முடியாது

கடைசி தொண்டன் இருக்கும் வரை அ.தி.மு.க. என்ற ஆலமரத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்று புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் கூறினார்.

Update: 2017-01-17 23:00 GMT
தஞ்சாவூர்,

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை ரெயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் விழாவில் மலேசிய கல்வி அமைச்சர் கமல்நாதன், உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், சிங்கப்பூர் துணைபிரதமரின் கிளை செயலாளர் ஜோஸ்வாகுமார், லண்டன் டாக்டர் தனபால், சீனாவை சேர்ந்த ஜார்ஜ்ஜூவா ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா விட்டுச் சென்ற அறிக்கை

எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆருடன், உடன் இருந்து ஈழத்தில் நடந்த அத்தனை பிரச்சினைகளிலும் அவருக்கு ஆக்கமும், ஊக்கமும், பக்கபலமாக இருந்த பழ.நெடுமாறன் இங்கு இருக்கிறபோது எம்.ஜி.ஆரின் இதயமும் இங்கு இருக்கிறது. எம்.ஜி.ஆரின் இதயக்கனியாக இருந்த ஜெயலலிதா மறைந்த இந்த சூழ்நிலையில் நாம் அவருடைய நூற்றாண்டை கொண்டாடுவது சற்று வருத்தம் அளிக்கிறது. ஜெயலலிதா தான் முன்னின்று இந்த நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என்று மருத்துவமனையில் இருந்து அறிக்கை விட தயாராக வைத்து இருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெயலலிதா நம்மை விட்டு மறைந்து விட்டார்.

இருப்பினும் கடைசியாக அவர் விட்டுச்சென்ற அறிக்கை படி தமிழகம் முழுவதும், தமிழக அரசும், அ.தி.மு.க.வினரும், எம்.ஜி.ஆரின் தொண்டர்களும் இந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுவது நமக்கு பெருமை அளிக்கிறது.

யாராலும் வீழ்த்த முடியாது

தீயசக்தி என்று ஜெயலலிதா யாரை கூறினாரோ? அவரை 15 ஆண்டுகளாக தமிழகத்தில் எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர். தன்னை வீழ்த்தவே முடியாது என்ற வரலாற்றை அவர் படைத்தார். எம்.ஜி.ஆரை பின்பற்றி ஜெயலலிதாவும் ஆட்சி நடத்தினார். அவர்கள் போட்ட அ.தி.மு.க. என்ற அடித்தளம் 44 ஆண்டுகளாக நிலையாக உள்ளது. அந்த அடித்தளம் மேலும், மேலும் வலுப்பெற்று வருங்கால இளைஞர்கள், லட்சோபலட்சம் தொண்டர்கள் இன்னும் அந்த நினைவை எடுத்துச்செல்வார்கள் என்ற அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.

கடைசி தொண்டன் இருக்கும் வரை அ.தி.மு.க. என்ற ஆலமரத்தை யாராலும் வீழ்த்த முடியாது. “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று பாடுபட்டால் நாளை நமதே” என்றார் எம்.ஜி.ஆர்.. அவர் கூறியபடி இன்றும் நமதே, நாளையும் நமதே, எதிர்காலமும் நமதே.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்