ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டுவரக்கோரி கரூர் மாவட்டத்தில் 4-வது நாளாக போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வரக்கோரி கரூர் மாவட்டத்தில் 4-வது நாளாக கல்லூரி மாணவ- மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-01-21 23:00 GMT
கரூர்,

போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வரக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக கரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்று 4-வது நாளாக கல்லூரி மாணவ- மாணவிகள் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கூடி போராட்டம் நடத்தினர். இதேபோன்று பல்வேறு அமைப்பினர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மொட்டை

கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கரூர் ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கரூர் தாலுகா அலுவலகம் முன்பு இளைஞர்கள், பெண்கள் என பலர் போராட்டம் நடத்தினர். கரூர் வெங்கமேடு பகுதி மக்கள் நேற்று காளை மாட்டுடன் ஊர்வலமாக வந்தனர். இதில் கலந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த டெய்லர் வேலை பார்த்து வரும் வெங்கடேசன்(வயது 40) என்பவர் ஒரு பக்க தலை முடியை மொட்டை அடித்துக்கொண்டும், ஒரு பக்க மீசை, ஒரு பக்க தாடி ஆகியவற்றை எடுத்துக்கொண்டும் ஊர்வலத்தில் பங்கேற்றார்.

லாலாப்பேட்டை- நச்சலூர்

கிருஷ்ணராயபுரம் வட்டம், லாலாப்பேட்டையில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இரவு, பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் லாலாப்பேட்டை பகுதிகளில் காளை மாட்டுடன் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நச்சலூர் பஸ் நிறுத்தத்தில் அப்பகுதி பொதுமக்கள் காளை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கொட்டும் மழையில்...

தோகைமலை பஸ் நிலையம் அருகே கொட்டும் மழையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தோகைமலை அருகே உள்ள பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கப்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிக்கும் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பொருந்தலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து கையில், கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கோரி ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

இதேபோல் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, மலைக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்