மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்

மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.

Update: 2017-01-30 22:45 GMT
கீழக்கரை,

மடிக்கணினி

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ரூ.27¾ லட்சம் மதிப்பில் 163 மாணவ–மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:– மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாணவ, மாணவிகளின் நலனை மேம்படுத்தும் விதமாக 14 வகையான மாணவர் நல திட்டங்களை செயல்படுத்தினார். இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் முழுமையாக செயல்படுத்த இயலாத திட்டமான இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.8,900 கோடி மதிப்பில் 33 லட்சம் மாணவ மாணவிகள் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளைப் பெற்று பயனடையும் வகையில் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அக்கறை

இதுதவிர மாணவ–மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்தம் 5,00,000 மாணவ–மாணவிகளுக்கு ரூ.890 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு மாணவ மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுத்தி வரும் பல்வேறு மாணவர் நல திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முகமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப், இயக்குனர் ஹாமீது இப்ராகீம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. அசன்அலி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, முன்னாள் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் தர்மர், சுந்தரபாண்டியன், கீழக்கரை நகர் செயலாளர் ராஜேந்திரன், கீழக்கரை நகர் மாணவரணி செயலாளர் சுரேஷ் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்