விழுப்புரத்தில் 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் 3 வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-01-30 22:45 GMT
விழுப்புரம்,

அரசு பஸ் டிரைவர்

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வசித்து வருபவர் துரைசாமி மகன் ஆறுமுகம் (வயது 45). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் மதியம் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை இவருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

நகை, பணம் திருட்டு

உடனே இதுகுறித்து அவர்கள் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கும், ஆறுமுகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் ஆறுமுகம் சென்னையில் இருந்து விரைந்து வந்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.11,500 ஆகியவை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதற்கிடையே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் மருதப்பன், சத்தியசீலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் 2 வீடுகளில்...

இதேபோல் விழுப்புரம் சாலாமேடு எழில் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (60). கூட்டுறவு வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரியான இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சீர்காழியில் உள்ள கோவிலுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த டி.வி. மற்றும் வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

மேலும் சாலாமேடு முல்லை வீதியை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் (60). நீதிமன்ற ஓய்வு பெற்ற ஊழியரான இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். பின்னர் நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 5 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. 3 வீடுகளிலும் சேர்த்து திருட்டுப்போன நகை, பணம், பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சமாகும்.

இதுகுறித்த புகார்களின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்