புளியங்குடியில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு ஜெயில்

தொழிலாளியை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து, சங்கரன்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-01-30 19:05 GMT
சங்கரன்கோவில்,

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

நெல்லை மாவட்டம் தென்காசி தாலுகா நெடுவயல் அருகே உள்ள அச்சன்புதூரை சேர்ந்தவர் லிங்கம் என்ற மகாலிங்கம் (வயது 49). அவருடைய மனைவி புஷ்பம்.

புளியங்குடி டி.என்.புதுக்குடி பிச்சாண்டி கீழத் தெருவை சேர்ந்தவர் ஈசுவரன் (46) கூலி தொழிலாளி. இவருக்கு புஷ்பம் அத்தை மகள் உறவு முறையாவார். மகாலிங்கம் தினமும் மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பம் தனது கணவரை பிரிந்து சென்று விட்டார்.

கடந்த 17.7.2016 அன்று ஈசுவரன் புளியங்குடி வேன் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மகாலிங்கம், “எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றதற்கு நீ தான் காரணம்“ எனக்கூறி ஈசுவரனிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் தான் வைத்திருந்த அரிவாளால் ஈசுவரனை வெட்டினார். இதில் அவரது இடதுப்புற காது அறுந்தது. மேலும் அவரது கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதுபற்றிய புகாரின் பேரில் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

7 ஆண்டு ஜெயில்

சங்கரன்கோவில் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஸ்ரீராமஜெயம் விசாரித்து, மகாலிங்கத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 500 ரூபாய் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதத்துக்கு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்