ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் போலீஸ் யார்? கமி‌ஷனர் அலுவலகத்தில் அடையாள அணிவகுப்பு

சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால், வன்முறை வெடித்தது.

Update: 2017-01-30 23:30 GMT
சென்னை,

சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால், வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் பெண் போலீஸ் ஒருவர் ஆட்டோ ஒன்றில் தீ வைப்பது போன்ற காட்சியும், போலீஸ்காரர் ஒருவர் வாகனங்களை லத்தியால் அடித்து சேதப்படுத்துவது போன்ற காட்சியும் வீடியோவாக வெளியிடப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆட்டோவுக்கு தீ வைத்த சம்பவமும், வாகனங்களை லத்தியால் சேதப்படுத்திய சம்பவமும், மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.

வீடியோ காட்சியில் உள்ள போலீசார் யார் என்று அடையாளம் காண்பதற்காக கமி‌ஷனர் அலுவலகத்தில் நேற்று அடையாள
அணிவகுப்பு நடத்தப்பட்டது. அம்பேத்கர் பாலம் பகுதியில் கடந்த 23–ந்தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆண், பெண் போலீசார் அனைவரும் அடையாள அணிவகுப்பில் கலந்து கொண்டனர். வீடியோ காட்சி மூலம் சம்பந்தப்பட்ட இருவரை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த முயற்சியில் சம்பந்தப்பட்ட போலீசார் இருவர் யார் என்று கண்டுபிடிக்கப்
படவில்லை என்றும், விரைவில் கண்டுப்பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் போலீசின் பெயர் லட்சுமி என்று நேற்று இரவு தகவல் பரவியது. அதை உயர் போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.

மேலும் செய்திகள்