படித்த, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் படித்த, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2017-01-30 21:30 GMT
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு (மாற்றுத்திறனாளிகளுக்கு) மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.375-ம், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ.450-ம் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது.

தற்போது தமிழக அரசின் அரசாணைப்படி, 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

இந்த உதவித்தொகையை பெற திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவராக இருக்க வேண்டும். வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதியன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், மற்றவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ- மாணவியராக இருக்கக்கூடாது. ஆனால் தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப்படிவம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும், தேர்வு மையங்களுக்கு சென்று வருவதற்கும் இந்த தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் உடனடியாக திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பப்படிவம் பெற்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் எஸ்.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்